இனிமேல் ஒருவரும் தப்பிக்க முடியாது.. அரசு மருத்துவமனையில் அதிரடியை பார்த்தீங்களா? நிம்மதியில் சென்னை
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில், ஊழல் மற்றும் லஞ்சப் புகார்கள் உள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில், அதுகுறித்த முக்கிய விளக்கம் ஒன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ளது.
ஏழை-எளிய மக்கள் மருத்துவ சேவையை எளிதில் பெறுவதற்கும், குறைந்த செலவில் நோயில் இருந்து குணம் அடைவதற்கும் அரசு மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள்..

மருத்துவமனை: மேலும், தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமை உள்ளதால்தான், பொதுமக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள்.. அரசு இலவசமாக மருத்துவ சேவையை வழங்கினாலும், டாக்டர்கள் நல்ல விதமாக சிகிச்சை அளித்தாலும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சில ஊழியர்கள், தாங்க முடியாத அளவுக்கு குடைச்சல் தருவதாக தொடர்ந்து புகார்கள் கிளம்பி வருகிறது.
வீல் சேர்: ஸ்டிரெச்சர் தள்ளுவதற்கு ரூ.300-ம், வீல் சேர் தள்ளுவதற்கு ரூ.100-ம் என நோயாளிகளின் உறவினர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக தெரிகிறது.. இதுகுறித்த புகார் ஒன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் எழுந்தது..
ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை திகழ்ந்து வருகிறது.. உள்நோயாளிகளாக மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக தினமும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் இங்கு சிகிச்சைக்காக வந்து போகிறார்கள்.. இதைத்தவிர மருத்துவ நிபுணர் குழுவும், உயர் கட்டமைப்பும் இருப்பதால் வெளிநாடுகளிலிருந்தும்கூட பலர் சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள்..
போஸ்ட் மார்ட்டம்: இந்த மருத்துவமனையில் சிலசமயம் சிகிச்சை பலனின்றி நோயாளிகள் இறக்க நேரிடுகிறது.. அப்படி இறப்பவர்களில், காவல் துறை வழக்கு தொடர்புடையவர்களாக இருந்தாலோ அல்லது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரிலோ, அவர்களின் உடல்கள் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, அதற்கு பிறகே சொந்தக்காரர்களிடம் ஒப்படைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால், அப்படி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட உடல்களை, பெற்றுக்கொள்வதற்கு வரும் உறவினர்களிடம், சில ஊழியர்கள் பணம் கேட்பதாக, நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில்தான், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் இதற்கான விளக்கம் ஒன்றை உடனடியாக தந்துள்ளார்.
போஸ்ட் மார்ட்டம்: அதில், "மருத்துவக் குழுவினரின் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இறப்பவர்களுக்கு வழக்கு தொடர்பு இருந்தால், அவர்களின் உடல் கட்டாய பிரேதப் பரிசோதனை செய்த பிறகு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. உறவினர்களிடம் நேரடியாக வழங்குவதில்லை. மருத்துவமனையில் ஊழல் புகார்கள் மற்றும் லஞ்சம் பெற முயற்சி செய்தால், லஞ்ச ஒழிப்பு அதிகாரியை தொடர்பு கொள்ள வசதியாக எல்லா இடங்களிலும் விஜிலன்ஸ் தொடர்பு எண் ஒட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தளத்திலும் ஆலோசனைப் பெட்டி சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் பெறப்படும் புகார் கடிதங்கள் மீது வாரம் தோறும் சனிக் கிழமைகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆறுதல்: செய்தியில் குறிப்பிட்டவாறு எந்தவித புகாரும் இதுவரை பெறவில்லை. மருத்துவமனையில் இணை பேராசிரியர் தலைமையில் 3 உதவி பேராசிரியர்களுடன் விஜிலன்ஸ் கமிட்டி இயங்கி வருகிறது. இந்த குழுவின் உதவியுடன் இப்புகார் குறித்து முழு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications