அப்பவே அடித்து சொன்ன ஸ்டாலின்.. ரெடியான அமைச்சர்கள்.. பொன்முடி ரெய்டு.. திக்திக் பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முன்பே அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.

காலை 7 மணி முதல் 50 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. விழுப்புரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு என்ன காரணம் என்று அதிகார்பூர்வ விவரம் வெளியிடப்படவில்லை. என்ன வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடக்கிறது என்று அமலாக்கத்துறை கூறவில்லை.
இதற்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இதேபோல் டார்கெட் செய்யப்பட்டார். சமீபத்தில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார்.
அவர் வீட்டில் ரெய்டு மற்றும் கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறை பொதுவில் வெளியிடவில்லை. அதே சமயம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது பொன்முடி வீடுகளில் ரெய்டு நடக்கிறது.
ஆனால் இந்த ரெய்டுக்கு எல்லாம் அமைச்சர்கள் முன்பே தயாராகி இருந்தனர் என்றுதான் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் எச்சரிக்கை: இந்த ரெய்டு குறித்து முன்பே முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை அழைத்து.. லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள்.
கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி உள்ளார். முக்கியமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி, ஏ வ வேலு உள்ளிட்டவர்களை அழைத்து பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. அதை தொடர்ந்து பொன்முடி வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. முதல்வரின் எச்சரிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் இந்த ரெய்டுக்கு தயாராக இருந்ததாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications