90ஸ் ஆஸி. போலவே அவதாரம் எடுத்த இந்தியா.. கங்குலி டீம் மாதிரி மாறிய ஆஸ்திரேலியா.. எதிர்பாராத ட்விஸ்ட்
சென்னை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கங்குலி தலைமையில் இருந்த பழைய இந்திய அணி போல மாறிக்கொண்டு வருகிறது.. இன்னொரு பக்கம் இந்திய கிரிக்கெட் அணியோ பாண்டிங் தலைமையில் இருந்த ஆஸ்திரேலிய அணி போல மாறிக்கொண்டு வருகிறது.
உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.. 90களில், 2000ன் தொடக்கத்தில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு தெரியும் .. பாண்டிங் படை என்றால் எவ்வளவு வலிமையானது என்று. அந்த அணியை பார்க்கவே பலருக்கும் கோபமும், ஆச்சர்யமும் வரலாம். அதிலும் பாண்டிங் உருவாக்கி வைத்து இருந்த அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், டெய்ல் எண்டர் என்று எல்லோருமே வலுவாக இருந்த காலம் அது.
இணையத்தில் ஒரு மீம் சமீபத்தில் வைரலானது.. அதில்.. தோனி கோப்பை வாங்கிய போதெல்லாம் அதை இளம் வீரரிடம் கொடுப்பார். அந்த வழக்கத்தை தொடங்கி வைத்தது தோனி என்று ஒருவர் போஸ்ட் செய்து இருந்தார். இதற்கு பதிலாக கேள்வி எழுப்பிய நெட்டிசன் ஒருவர்.. அப்போது கங்குலி யார் கையில் கொடுப்பார் என்று கேட்டார்.

அதற்கு இன்னொரு நெட்டிசன்.. "பாண்டிங்" கையில் என்று பதில் அளித்து இருப்பார். அந்த அளவிற்கு பாண்டிங்கின் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பல இடங்களில் புரட்டி எடுத்து இருக்கிறது. அதிலும் 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வாங்கிய அடி எல்லாம் மறக்கவே முடியாது.
ஆஸ்திரேலியா அணி: ஆஸ்திரலியா அணியில் ஸ்டீவ வாக் தலைமையில் இருந்தவர்களும் சரி.. பாண்டிங் தலைமையில் இருந்தவர்களும் சரி.. இரண்டு அணிக்கும் ஒரு ஒற்றுமை என்றால் அது பேட்டிங் ஆர்டர்தான். டாப் ஆர்டரை தூக்கிவிட்டால் அணி காலி என்று சொல்ல முடியாது. மிடில் ஆர்டர் நின்று ஆடி வெற்றிபெறும். மிடில் ஆர்டரை காலி செய்தாலும் அணி காலி என்று சொல்ல முடியாது. டெயில் எண்டர்கள் அடித்து வெற்றிபெறவைப்பார்கள்.
( ரொட்டேட் வியூகம்.. திணறிய ஆஸ்திரேலியா.. 3 விக்கெட்டை பட்டென இழந்தும்.. இந்தியா வென்றது எப்படி? )
எல்லோரும் அவுட் ஆனால் கூட.. கிலிக்ரிட்ஸ் தனியாக பவுலர் ஒருவரை துணைக்கு வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்த கதைகள் உண்டு. ஆனால் இன்னொரு பக்கம் கங்குலியின் இந்திய அணியோ டாப் ஆர்டர் முடிந்தால் அவ்வளவுதான். கங்குலி, சேவாக், சச்சின் ஆகியோர் அவுட் ஆனால் அணி முடிந்தது. மீண்டும் வருவதே கஷ்டம். டிராவிட்டும் அணியில் இருக்கும் பட்சத்தில்.. அவரையும் அவுட் ஆக்கினால்.. அவ்வளவுதான் டீவியை ஆப் செய்துவிட்டு.. விஷுவின் "அரட்டை அரங்கம்" பார்க்க சென்றுவிடலாம் .
அந்த அளவிற்குதான் அன்று மைட்டி ஆஸ்திரேலியாவும்.. இந்திய அணியும் இருந்தது. பேட்டிங் ஸ்பிரிங் வைத்து வென்றுவிட்டனர் என்றெல்லாம் ஆஸ்திரேலியர்கள் மீது பழி போட்டு மனசை தேற்றிக்கொள்ளும் நிலைமைதான் இருந்தது.
பாஸ்ட் பார்வேட்: ஆனால் அப்படியே பாஸ்ட் பார்வேட் செய்து இப்போது பார்த்தால் நிலைமை மாறிவிட்டது. இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் அப்படியே உருமாறி உள்ளது. உதாரணமாக நேற்று ஆஸ்திரேலியா அடித்ததே 199 ரன்கள்தான். அந்த அளவிற்கு இந்தியாவின் பவுலிங் சிறப்பாக இருந்தது.

ஆனால் அதன்பின் இந்தியா பேட்டிங் இறங்கி.. தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. இருந்தாலும் கோலி கே எல் ராகுல் பேட்டிங் காரணமாக இந்தியா சிறப்பாக ஆடி.. சரிவில் இருந்து மீண்டு இந்த போட்டியில் வென்றது. இந்த மேட்சில் இந்தியா வெல்வதற்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.
முன்பெல்லாம் இப்படி இந்தியாவின் டாப் ஆர்டர் காலி ஆனால் கதை முடிந்தது. மீண்டும் வரவே முடியாது. ஆனால் நேற்று டாப் ஆர்டர் அவுட் ஆன பின்பும் இந்தியா வென்றது. கோலி போனால் கூட பாண்டியா, ஜடேஜா, அஸ்வின் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஹாட் ஸ்டாரை ஆப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை .

ஆனால் இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவோ டாப் ஆர்டரில் ஸ்மித், வார்னர் ஆகியோரை இழந்ததும் அப்படியே சீட்டு கட்டு போல சரிந்தது. 9 வரை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்று தைரியமாக இறங்கிய அதே ஆஸ்திரேலிய அணி.. கங்குலி டீம் போல.. டாப் ஆர்டர் காலியானது அப்படியே மிடில் ஆர்டர், டெயில் எண்டர்களும் காலி ஆனார்கள். கிட்டத்தட்ட 2000ஸ் கங்குலி அணியை இவர்கள் கண் முன் காட்டினார்கள்.. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள் போல!












Click it and Unblock the Notifications