"கலைஞர்" பாஜககிட்ட.. "வெட்கத்தை விட்டு சொல்றேன்".. ஆமா, நாங்கள் தோத்துட்டோம்.. சீறிய ராஜீவ் காந்தி
திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி ஸ்பெஷல் பேட்டியை ஒன் இந்தியாவுக்கு தந்துள்ளார்
சென்னை: குறிப்பிட்ட மதத்தை, குறிப்பிட்ட மொழியை, கொச்சைப்படுத்தி என்னவேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்று சாதித்து காட்டியவர் மோடி.. அது தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே திமுக பதிலடியை தர வேண்டி இருக்கிறது என்று சொல்கிறார் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி.
திமுகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு பேசியபோது, "இன்றைக்கு தமிழக கவர்னர் எதிர்க்கட்சியைப்போலச் செயல்படுகிறார். அதேபோல பாஜகவினர் ஒரு சின்ன விஷயத்தைக்கூட ஊதி பெரிதாக்குகிறார்கள்.
ஏதோ இந்த நாட்டிலேயே சட்டம்-ஒழுங்கு இல்லை என்கிற ஒரு மாயையை உருவாக்கக்கூடிய அளவுக்கு ஊடகங்களை, பத்திரிகையாளர்களை மிரட்டி பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நேரு நறுக்
எப்படியும் இந்த ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். நான் வெளிப்படையாக, வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன்... இன்றைக்கு இருக்கிற அதிகாரிகள் மத்திய அரசுக்கு மிகவும் பயப்படுகிறார்கள்.. கடந்தகாலத்தைவிட மிகக் கடுமையான காலம் இது. கடந்தகாலம் என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் அண்ணன், தம்பிக்கு இடையே இருக்கிற போட்டியைப்போல. ஆனால், இன்றைக்கு சகல அதிகாரத்தையும் வைத்திருக்கிறவர்களோடு எதிர்த்து நிற்கிற போட்டியாக இருக்கிறது. அதனால் நாம் மிக மிக கவனமாகச் செயல்படக்கூடிய காலம் இது என்றார்.

ராஜீவ் காந்தி
இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி, நம் ஒன் இந்தியா தமிழுக்காக ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், அதிகாரிகள் பயத்தில் உள்ளார்களா? என்பது குறித்தும், கேஎன் நேரு பேசியது குறித்தும் கேள்விகள் எழுப்பினோம்.. அதற்கு ராஜீவ் காந்தி நம்முடன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை: "தன் மீது தவறு இருந்தால் தவறு என்று ஒப்புக் கொள்வதுதான் தலைமை.. திமுகவின் பொதுக்குழுவில் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் முதல்வர் கண்டிக்கிறார்.. ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் இருங்கள், நான் சோர்வடைகிறேன், என்று சொன்னதில் தவறில்லையே..

கருணாநிதி
கருணாநிதி இப்படியெல்லாம் தன் ஆட்சி காலத்தில் ஒருநாளும் சொன்னதில்லை என்கிறார்கள்.. கலைஞர் இருந்தபோது, அரசியல் களம் என்பதே வேறு.. தந்தை பெரியார் அரசியல் செய்தபோது, அவரது நேர் எதிரியாக மூதறிஞர் ராஜாஜி இருந்தார்.. ராஜாஜியை உடம்பெல்லாம் மூளை என்பார்கள்.. அவரிடம் ஒரு மனிதாபிமானம் உண்டு.. எவ்வளவுதான், தந்தை பெரியார் மீது எதிர்விமர்சனத்தை வைத்தாலும், சித்தாந்த ரீதியில் இருவரும் அடித்துக்கொண்டாலும் தனிமனித பகை கிடையாது.. அதேபோல, பிராமண இயக்கத்தை எதிர்த்து தந்தை பெரியார் அரசியல் நடத்தியபோதும், பல பிராமணர்கள் தந்தை பெரியாரோடு உறவுகொண்டிருந்தார்கள்.. நட்பு வைத்திருந்தார்கள்..

விபி சிங்
பாராளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா பேசியபோது, நேரம் முடிந்துவிட்டதாக மணியடிக்கப்பட்டது.. அவரை பேசவிடுங்கள் என்றார் ஜவஹர்லால் நேரு.. "முதல் குரல் இப்போதுதான் ஒலிக்கிறது.. நாம் நம்மை மாற்றி கொள்ள வேண்டும், திருத்தி கொள்ள வேண்டும், அதனால் அந்த குரலை கேட்க வேண்டும்" என்று சொன்னார். அப்படியான ஜனநாயகத்தன்மை அங்கு இருந்தது.. கலைஞர் இங்கு ஆண்டபோது மிகப்பெரிய தலைவர்கள், அந்தந்த மாநிலங்களில் ஆண்டு கொண்டு இருந்தார்கள்.. முலாயம்சிங், லாலுபிரசாத், தேவகவுடா, விபி சிங், குஜ்ரால், அத்வானி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

அத்வானி + வாஜ்பாய்
கூட்டணியின்போது, வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் மதம் பின்னணியாக இருந்தது.. அடிப்படைவாதம் பின்னணியாக இருந்தது.. ஆனால், மாநில கட்சியை வைத்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் சமரசம் செய்து கொண்டார்கள்.. ராமர்கோயில் உட்பட சில விவகாரங்களை பேசக்கூடாது என்று திமுக கோரிக்கை வைத்தபோது, பேசமாட்டோம் என்று உறுதி தந்தார்கள்.. இத்தனைக்கும் அரசியல் சட்டத்தின் குடியுரிமையை திருத்தும் நோக்கம் பாஜகவுக்கு அப்போது வந்தது.. ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்ற நோக்கமும் வந்தது.. காஷ்மீர் மீது "கை" வைக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்தது.. ஆனால், திமுகவுடன் செய்து கொண்ட சமரசத்தின்படி, அவைகளை ஏற்றுக் கொண்டார்கள்.. மாறாக தாங்கள் நினைத்ததை எதையுமே அவர்கள் செய்யவில்லை..

கலைஞர்
ஆக, ஜனநாயகத்தன்மை என்பது அப்போது தழைத்தோங்கியது.. அதனால் கலைஞரின் அரசியல் அன்று அப்படி இருந்தது.. ஆனால், இன்றைக்கு அப்படியா இருக்கிறது? இன்று அரசியல் செய்வது மோடி என்ற பாசிசவாதி.. ஹிட்லரைவிட மோசமானவர் என்று நீதிமன்றங்களாலேயே விமர்சிக்கப்பட்ட அமித்ஷா, இன்று இந்தியாவின் முக்கிய அமைச்சராக இருக்கிறார்.. தாங்கள்தான் தலைவர்கள், தாங்கள்தான் புனிதர்கள், தாங்கள் எடுப்பதே முடிவு என்று தங்களுக்கு தாங்களே ஒரு பிரம்மையை ஏற்படுத்தி கொண்ட இதுபோன்றவர்களுடன் அரசியல் செய்யும்போது, நாங்கள் கொஞ்சம் தோற்றுதான் போகிறோம்.. ஆனால், அதேசமயம், இவர்களின் அற்பத்தனமான அந்த அரசியலை புரிந்துகொண்டு, சாணக்கியத்தனத்தில் மேலேங்கி வந்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications