கைமாறியதா ரூ.1,614 கோடி முதலீடு? 3 கொரிய நிறுவனங்கள் விவகாரம்.. தமிழக அரசு கொடுத்த விளக்கம் என்ன?
சென்னை: தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தென்கொரியாவை சேர்ந்த 3 நிறுவனங்கள் ஆந்திராவில் புதிய ஆலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதற்கு தமிழக அரசும் விளக்கம் அளித்துள்ளது. அப்படி என்ன நடந்தது?
தென்கொரியாவை சேர்ந்த ஹவாஷின், செயோன், ஐவாமெட் ஆகிய 3 வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆந்திராவில் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. ஹூண்டாய், கியா ஆகிய கார் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் இந்த நிறுவனங்கள், ஆந்திர அரசின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

ஆந்திரா முதலீடு
இதன்படி, ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் புதிய உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் ஹவாஷின் நிறுவனம் ரூ.850 கோடியும், செயோன் நிறுவனம் ரூ.514 கோடியும், ஐவாமெட் நிறுவனம் ரூ.250 கோடியும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இந்த முதலீடுகள் மூலம் மொத்தம் 1,418 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் ஆந்திர தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது ஹூண்டாய், கியா நிறுவனங்களின் விநியோக தொடரில் இடம்பெற்றுள்ள கொரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாகவே இந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து கொண்டிருக்கின்ணுன.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இது தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
நேற்றுகூட, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்த விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்தார்.. "ரீல்ஸ் பாலிடிக்ஸும்... ரியாலிட்டி செக்கும்! - ரூ.1614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக விஜய் அரசு!" என்ற தலைப்பில் அவர் தனது கருத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தது பலரது கவனத்தை பெற்றது.
தமிழக அரசு விளக்கம்
இந்த நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கான தகவல் நம்பகத்தன்மை பிரிவு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
அதில், "ஆந்திராவுக்கு சென்றதா தமிழ்நாடு முதலீடுகள்.. உண்மை என்ன ? Hyundai நிறுவனத்தின் உதிரிபாகங்கள் மற்றும் வாகன உற்பத்தி சார்ந்த சப்ளையர் நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் Seoyon E-Hwa மற்றும் Hwashin போன்ற கொரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருகின்றன.
ஆந்திராவுக்கு சென்றதா தமிழ்நாடு முதலீடுகள்
ஆந்திராவில் Kia நிறுவனம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, Seoyon E-Hwa நிறுவனம் 2017ஆம் ஆண்டிலேயே ஆந்திராவிலுள்ள அனந்தபூரில் தனது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது. தற்போது Kia நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு சில சப்ளையர் நிறுவனங்கள், ஆந்திரப் பிரதேசத்தில் தங்களது உற்பத்தியை விரிவுப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதலீடுகளை விரிவுப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான (EV) உதிரிபாகங்கள் மற்றும் உயர்தர வாகன மின்னணுவியல் (Automotive Electronics) உற்பத்தியிலும் தங்களை விரிவுப்படுத்தி வருகின்றன. இத்தகைய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு விளக்கம்
மேலும், இந்நிறுவனங்கள் EV உதிரிபாக உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையங்களை (R&D Centres) தமிழ்நாட்டில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக, மற்றொரு கொரிய நிறுவனமான Inzi Controls, தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை புனேவில் அமைப்பதற்கு பதிலாக சென்னையைத் தேர்வு செய்துள்ளது.
அடுத்தகட்டமாக Hyundai நிறுவனம் மற்றும் அதன் சப்ளையர் நிறுவனங்களுக்கான முதலீடு திட்டங்களை அறியவதற்கும், தேவையான உதவிகளை புரிவதற்கும், விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை Guidance Tamil Nadu மேற்கொண்டு வருகிறது" என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறது நம்முடைய அரசு?
ஆந்திராவில் கியா நிறுவனத்தின் விரிவாக்கத்தை கருத்தில் கொண்டே சில நிறுவனங்கள் அங்கு உற்பத்தியை அதிகரிப்பதாக தமிழக அரசு விளக்கியுள்ளது. அதேநேரத்தில், ஹூண்டாய் நிறுவனத்தின் சப்ளையர்கள் தமிழகத்தில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும், மின்சார வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்காக ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் சப்ளையர்களுடன் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
