அமெரிக்க தேர்தல்.. டிரம்புக்கு பெரிய அடி.. மொத்தமாக மண்ணை கவ்விய குடியரசுக் கட்சி!
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி மண்ணை கவ்வியுள்ளது. செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரண்டிலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை தாண்டி முன்னிலை பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு செனட் சபையில் 51 இடங்கள் தேவை என்கிற போது, ஜனநாயக கட்சி 53 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் டிரம்பின் குடியரசு கட்சி செனட் சபையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சி 41 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்கள் உள்ளன. இதில், ஜனநாயக கட்சி 225 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 218 இடங்கள் என்ற போது ஜனநாயக கட்சி அதை விட கூடுதல் பெற்றுள்ளது. டிரம்பின் குடியரசுக்கட்சி 134 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

அமெரிக்க இடைக்கால தேர்தல்
அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இடைக்கால தேர்தல் என்று அழைக்கப்படும் இந்த தேர்தல், டிரம்பின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கக்கூடிய இடைக்கால தீர்ப்பாக இருக்கும் என்பதால் அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலக நாடுகளே உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
இன்று மாலைக்குள் முடிவுகள் ஓரளவு தெரியவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இரு அவைகளிலும் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அது டிரம்புக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் டிரம்புக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் டிரம்பின் குடியரசு கட்சியை வீழ்த்தி ஜனநாயக கட்சி பெரும்பான்மையை தாண்டி முன்னிலை பெற்றுள்ளது. இதனால் டிரம்பின் எஞ்சிய இரண்டு ஆண்டு பதவி காலத்தில் அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜனநாயக கட்சியால் முட்டுக்கட்டை போட முடியும்.
செனட், பிரதிநிதிகள் சபையை இழந்த டிரம்ப் கட்சி
தற்போதைய நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சி செனட் சபையை இழக்கும் நிலையே உள்ளது. மொத்தம் உள்ள 100 இடங்களில் பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை என்கிற போது ஜனநாயக கட்சி 53 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சி 41 இடங்களிலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் செனட் சபையை டிரம்ப் கட்சி இழக்கும் என்றே கூறப்படுகிறது.
பிரதிநிதிகள் சபைக்கு பெரும்பான்மைக்கு 218 இடங்கள் என்ற போது ஜனநாயக கட்சி அதை விட கூடுதல் பெற்று (225) முன்னிலை பெற்றுள்ளது. டிரம்பின் குடியரசுக்கட்சி 134 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
பிரதிநிதிகள் சபை - (மொத்தம் 435 இடங்கள்)
* குடியரசுக் கட்சி - 134 இடங்களில் முன்னிலை
* ஜனநாயக கட்சி - 225 இடங்களில் முன்னிலை
செனட் சபை - (மொத்தம் 100 இடங்கள்)
* குடியரசுக் கட்சி - 41 இடங்களில் முன்னிலை
* ஜனநாயக கட்சி - 53 இடங்களில் முன்னிலை
முடிவுகள் எப்போது?
இந்த தேர்தலில் 26 லட்சம் இந்திய வம்சாவளி வாக்காளர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய சக்தியாக உள்ளனர். கென்டக்கி மற்றும் இந்தியானா மாகாணங்களில் முதல் கட்ட வாக்குச்சாவடிகள் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணி) வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் வெளியாக தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்களில் நேர வேறுபாடு இருப்பதால் வாக்குப்பதிவு நிறைவடையும் நேரமும் மாறுபடும். வாக்குப்பதிவு முடிந்ததும் அந்தந்த மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை உடனடியாக அறிவிக்க முடியாத நிலை ஏற்படலாம். தபால் வாக்குகள் உள்ளிட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட வேண்டியிருப்பதால் சில தொகுதிகளின் முடிவுகள் தாமதமாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்புக்கு அக்னி பரிட்சை
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், ஈரான் போர் ஆகியவற்றால் விண்ணை முட்டும் விலைவாசி ஆகிய பிரச்சினைகளுக்கு நடுவே இந்த தேர்தல் நடைபெற்றது. எனவே டிரம்பின் சமீப கால நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்கள் ஆதரவை அளிக்கிறார்களா? இல்லையா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்பதால், டிரம்ப் நிர்வாகத்திற்கு இந்த தேர்தல் முடிவு குடியரசுக்கட்சிக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை, பிரதிநிதிகள் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. செனட் அவையில் 100 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் 435 உறுப்பினர்களும் உள்ளனர். மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் தலா 2 உறுப்பினர்கள் வீதம் செனட் சபைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செனட் சபையில் உள்ள மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு இடைக்காலத் தேர்தலிலும் 435 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம்.


Click it and Unblock the Notifications
