இலங்கை அகதிகளுக்கு புதிய சிக்கல்? திருமணம் மட்டுமே குடியுரிமையை தராது! நீதிமன்றம் புதிய தீர்ப்பு!
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய குடியுரிமை குறித்து நேற்று மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அதில், இந்தியாவை சேர்ந்தவரை திருமணம் செய்துக்கொள்வதால் மட்டுமே வெளிநாட்டை சேர்ந்தவருக்கு குடியுரிமை உரிமை கிடைத்துவிடாது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பு இலங்கை அகதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியரை திருமணம் செய்து கொள்வதால் மட்டும் வெளிநாட்டவருக்கு இந்தியாவில் நிரந்தரமாக தங்குவதற்கோ அல்லது துணை விசா பெறுவதற்கோ உரிமை கிடைக்காது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லிசா ஹால் ஸ்ரீவஸ்தவா என்கிற அமெரிக்கா பெண், முகமது வாசிம் அகரம் என்ற இந்திய குடிமகனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய முறைப்படியும் பின்னர் மார்ச் மாதம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை தொடர்ந்து, தனது இ-சுற்றுலா விசாவை துணைவர் விசாவாக மாற்றக் கோரி அவர் வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்தும்.. விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும், வயது வித்தியாசத்தை காரணம் காட்டி அதிகாரிகள் தங்களை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதாகவும் அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி அமித் மகாஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சில முக்கிய வாதங்களை முன்வைத்திருந்தது. மனுதாரர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து.. அதன் மூலம் இந்தியாவில் குடியேற சலுகைகளை பெற முயன்றுள்ளார். கடந்த 2021 இல் முதல் திருமணம் முடிவுக்கு வந்ததால் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது திருமணம் கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்துள்ளது.
தற்போதைய கணவரின் வீட்டில் இவர் திருமணத்திற்கு முன்பே வாடகை செலுத்தி வசித்து வந்திருக்கிறார். இதற்கு முன்னர் இவர் திருமணம் செய்த போதும் விசா சலுகைக்காகவே இப்படியான திருமணங்களை செய்திருக்கிறார் என்பதே தெரிய வந்தது. எனவே, இந்த திருமணமும் விசா சலுகைக்காக செய்திருக்கிறார் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது என தெரிவித்திருந்தது.
இந்த வாதங்களை ஏற்ற நீதிமன்றம், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நுழைவதும், தங்குவதும் அரசின் இறையாண்மை சார்ந்த முடிவு. அதை அடிப்படை உரிமையாக கூற முடியாது என்று தெளிவாக கூறியிருக்கிறது. லூயிஸ் டி vs இந்திய அரசு என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதி, வெளிநாட்டவர்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 கீழ் வாழ்வதற்கான உரிமை மட்டுமே உள்ளதே தவிர.. இந்தியாவில் குடியேறும் உரிமை கிடையாது என்று தெளிவாக கூறியிருக்கிறது.
மிக முக்கியமாக சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண சான்றிதழ் பெற்றிருந்தாலும்.. விசா தகுதி மற்றும் திருமணத்தின் பின்னணியை ஆய்வு செய்யும் குடியேற்ற அதிகாரிகளின் அதிகாரத்தை அது தடுக்காது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இப்போது இந்த தீர்ப்பு இலங்கை அகதிகளுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் தங்களுக்கான குடியுரிமைக்காக தொடர்ந்து எதிர்பார்த்திருக்கின்றனர். திருமணம் மூலம் இந்திய குடியுரிமையை பெறலாம் என்பது அவர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பாகும். ஆனால், திருமணம் மூலம் கூட.. குடியுரிமையை அவ்வளவு சீக்கிரம் பெற முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு.. இலங்கை தமிழர்களையும் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.




Click it and Unblock the Notifications
