மதுரை நகைக்கடையில் நடித்துக்காட்டிய நிஷாந்த்.. கொள்ளைக்கு காரணமான ஒரு விஷயம்
மதுரை: ரூ.15 கோடி தங்கம், வைரத்தை கொள்ளையடித்தது எப்படி? என்பது குறித்து, சம்பவம் நடந்த மதுரை தனிஷ் நகைக்கடையில் போலீசாரிடம் கொள்ளையன் நிஷாந்த் நேற்று நடித்து காண்பித்தார். சம்பவத்தன்று இரவில் எப்படி நகைக்கடைக்குள் சென்றார், கடையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு எந்த வழியாக தப்பி சென்றார், எங்கு எல்லாம் பயணித்தார், யார், யாரிடம் பேசினார் என்று நேற்று ஒரு நாள் காவலில் நிஷாந்த் விவரித்தார்.
மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை டாடாவின் தனிஷ்க் நகைக்கடை அண்மையில் தான் திறக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி முன்னதாக திறக்கப்பட்ட இந்த நகைக்கடையில் கடந்த 12-ந்தேதி ரூ.15 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் டியூபர் நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், காதலி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொள்ளையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?, உதவியது யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டி இருந்ததால், நிஷாந்தை மதுரை நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 19ம் தேதி மாலையில் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
போலீசார் நிஷாந்திடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று சில தகவல்களை கேட்டார்கள். அங்கு நிஷாந்த் அளித்த வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர். பின்னர் கொள்ளை சம்பவத்தில் மீனாட்சிக்கு என்ன தொடர்பு, அவருக்கும், நிஷாந்திற்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி, இருவரும் இணைந்து கொள்ளையடிக்க திட்டமிட்டனரா? என்பது குறித்தும் போலீசார் கேட்டு தகவல்களை பெற்றார்கள்.
நிஷாந்தை அழைத்து சென்றனர்
இதையடுத்து நேற்று மாலையில், கொள்ளை நடந்த நகைக்கடைக்கு நிஷாந்தை போலீசார் அழைத்துச்சென்றனர். சம்பவத்தன்று இரவில் எப்படி நிஷாந்த் நகைக்கடைக்குள் சென்றார், கடையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு எந்த வழியாக தப்பி சென்றார், எங்கு எல்லாம் பயணித்தார், யார், யாரிடம் பேசினார் என்பது குறித்து செய்து போலீசாரிடம் செய்து காண்பித்தார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.
அடையாளம் காட்டினார்
தொடர்ந்து நிஷாந்தின் வீட்டிற்கு அவனை அழைத்துச்சென்று, நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது எங்கே என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். மாடக்குளம் பகுதியில் உள்ள கண்மாய் கரைக்கும் நிஷாந்தை அழைத்து சென்று, நகைகள் புதைத்து வைக்கப்பட்ட இடம், எந்த நேரத்தில், எந்த இடத்தில் புதைத்து வைக்கப்பட்டது, கொள்ளையின்போது உடுத்தி இருந்த ஆடைகள், பயன்படுத்திய பொருட்களை தீவைத்து எரித்தது உள்ளிட்டவை தொடர்பாகவும் விசாரித்தனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பிரே மற்றும் நகைகளை புதைத்து வைக்க பயன்படுத்திய கடப்பாரை போன்றவற்றை நிஷாந்த் அடையாளம் காட்டினார். அவற்றை கைப்பற்றிய போலீசார், அதனை விசாரணைக்காக எடுத்து சென்றனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் மாலை மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு மீண்டும் நிஷாந்த்தை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 4-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நிஷாந்த்தை மதுரை மத்திய சிறையில் மீண்டும் போலீசார் அடைத்தனர்.
கொள்ளையடிக்க உதவிய இரும்பு சாரம்
விசாரணையின்போது நிஷாந்த் போலீசாரிடம் கூறிய தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிதாக அந்த நகைக்கடை அமைக்க தொடங்கிய தினத்தில் இருந்து, அதனை கடந்து செல்லும் போதெல்லாம் நிஷாந்த் கண்காணித்தே வந்தாராம். பின்பக்கத்தில் கட்டிட பணிக்காக மொட்டை மாடி வரை செல்வதற்கு இரும்பு சாரம் அமைக்கப்பட்டிருந்ததை பார்த்துள்ளார், அதன் வழியாக சென்று நகைக்கடையில் கொள்ளையடிக்கும் திட்டம் அவனுக்குள் உதித்திருக்கிறது. அதை செய்து முடித்துவிட்டால் காதலியுடன் ஆடம்பரமாக வாழலாம் என நிஷாந்த் நினைத்துள்ளான். அதன்படியே கொள்ளையடித்துள்ளான்.
நிஷாந்த் சிக்கியது எப்படி
தொடர்ந்து தனது பைக்கில் சேலம் வரை சென்றுள்ளான். அதை அங்கே ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓசூருக்கு பேருந்தில் சென்றுள்ளான். ஒவ்வொரு இடமாக பஸ்சில் சுற்றித்திரிந்து தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்து வந்துள்ளான். ஆனால் மீனாட்சி சிக்கிய பின்னர் இந்தியா முழுக்க நிஷாந்தின் படம் வைரலான நிலையில், முகத்தை மறைத்தபடி ஓசூரில் இருந்து மீண்டும் சேலத்திற்கு வந்துள்ளான். அதற்காக ஆம்னி பஸ்சில் புறப்பட்டுள்ளான். அப்போதுதான் கையில் இருந்த டாட்டூவால் அடையாளம் காணப்பட்டு சிக்கி உள்ளான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.





Click it and Unblock the Notifications
