2027 ஜனவரி 1ல் உங்களுக்கு 18வயது ஆகிறதா.. இன்று, நாளையும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, தமிழ்நாட்டின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், இன்றும், நாளையும், சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் ஊரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி முகாம்களிலும் சிறப்பு முகாம் இன்று நடைபெற இருக்கிறது. எனவே இதில் 2027 ஜனவரி 1ல் 18 வயது பூர்த்தி செய்வோர் வாக்காளர்களாக பெயரை சேர்க்கலாம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த 12ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் உள்ள விவரங்களின் படி, தமிழகத்தில் 2.82 கோடி ஆண்கள், 2.95 கோடி பெண்கள், 7,892 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என ஒட்டுமொத்தமாக 5.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பொதுவாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.in இணையதள முகவரி மற்றும் 'ECINET' மொபைல் செயலி வாயிலாக, விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. இதில் பெயர் நீக்கம், திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, அதற்குரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உள்பட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் 2027ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கடந்த, 12ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வரும் 21, 22ம் தேதி மற்றும் 29ம் தேதி ஆகிய 3 நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.மேற்கண்ட நாட்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத, 2027 ஜன., 1 அன்று அல்லது அதற்கு முன் 18 வயது பூர்த்தியடைந்த, தகுதியான வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை, அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் பொதுமக்கள் அளிக்கலாம்.
எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். முகவரி மாறியவர்கள் படிவம்-8ஐ பயன்படுத்தி தனது முகவரியினை மாற்றக் கோரும் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
