ரியல் எஸ்டேட் துறையில் தான ஆவணம்.. பதிவுத்துறையில் இப்படியொரு குழப்பமா? ஹென்றி வைத்த 8 கோரிக்கை
சென்னை: பத்திரப்பதிவு செய்யச் செல்லும் பொதுமக்கள் ஒரே ஆவணத்துக்காக பலமுறை அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலை இருக்கிறது. எந்த அலுவலகத்தில் எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க பதிவுத்துறையில் 8 முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று FAIRA நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பதிவுத்துறைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டாக்டர் ஹென்றி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிய மனைப்பிரிவுகளில் அமைக்கப்படும் சாலைகள், பூங்காக்கள், திறந்தவெளிப் பகுதிகள் (OSR) உள்ளிட்ட பொது உபயோக இடங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசுத் துறைகளுக்கும் தானமாக ஒப்படைப்பதில் மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை இல்லை.

சில இடங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், தனி அலுவலர், கிராம ஊராட்சி மற்றும் எதிர்காலத்தில் அந்தப் பொறுப்புகளை வகிப்பவர்களின் பெயர்களில் ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன. வேறு சில இடங்களில் தமிழ்நாடு ஆளுநரின் பெயரில் தான ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதனால் ஒரே மாதிரியான ஆவணங்களுக்குக்கூட வெவ்வேறு பதிவு அலுவலகங்களில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
திருவாரூரில் தான ஆவணம்
தஞ்சாவூர் பதிவு மண்டலத்துக்கு உட்பட்ட திருவாரூர் ஒன்றாவது இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 20.11.2026 அன்று தண்டலை கிராம ஊராட்சிப் பகுதியில் ஒதுக்கப்பட்ட பொது உபயோக இடங்களைத் தானமாக ஒப்படைக்க ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிச் சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட கிராம ஊராட்சியின் சார்பில், திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர், தனி அலுவலர், தண்டலை கிராம ஊராட்சி மற்றும் எதிர்காலத்தில் அந்தப் பொறுப்புகளை வகிப்பவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆவணத்தைப் பதிவு செய்ய முடியாது என்று கூறி சம்பந்தப்பட்ட இணை சார்பதிவாளர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதலை வெளியிட வேண்டும்.
30 நிமிடத்தில் புகாருக்கு பதில்
பதிவுத்துறையில் சட்ட நுணுக்கங்களும் நடைமுறை அனுபவமும் இல்லாத சில அலுவலர்களால் பொதுமக்கள் ஒரே ஆவணத்துக்காகப் பலமுறை அலைய வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் செலவு, காலதாமதம், முதலீடுகள் முடங்குவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, அனுபவமுள்ள அலுவலர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், புதிதாகப் பொறுப்பேற்கும் சார்பதிவாளர்களுக்குத் தொடர்ந்து சட்டப் பயிற்சி வழங்க வேண்டும். பொதுமக்கள், வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் தொடர்புகொள்ள தனி உதவி மையம் அமைக்க வேண்டும்.
சார் பதிவாளர் - காலக்கெடு
மேலும், ஆன்லைன் புகார் மையம் உருவாக்கி புகார் அளித்த 30 நிமிடங்களுக்குள் ஒப்புகை, பொறுப்பான அலுவலர் விவரம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த பதிலை வழங்க வேண்டும். தீர்வு காண கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் அதற்கான காலக்கெடுவையும் தெரிவிக்க வேண்டும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் தீர்வு கிடைக்காத புகார்களை மாவட்டப் பதிவாளர், துணைப் பதிவுத்துறைத் தலைவர் மற்றும் பதிவுத்துறைத் தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல தொலைபேசி மற்றும் இணையவழி வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
ரியல் எஸ்டேட்
ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் அரசுத் துறைகளுக்கு பொது உபயோக இடங்களை ஒப்படைப்பதற்கான மாதிரி தான ஆவணங்களையும் வெளியிட வேண்டும். சட்டப்படி குறைபாடு இல்லாத ஆவணங்களை நடைமுறை குழப்பங்களால் திருப்பி அனுப்புவதைத் தவிர்த்து, ஒவ்வொரு அலுவலரின் பொறுப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பொதுமக்களின் நேரம் மதிக்கப்பட வேண்டும். பதிவுத்துறையில் அனுபவத்துக்கும் சட்ட அறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். புகார்களுக்கு விரைவான பதிலும், வெளிப்படையான சேவையும் கிடைக்க வேண்டும். இதற்கான நிரந்தரச் சீர்திருத்தங்களைப் பதிவுத்துறைத் தலைவர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஆ.ஹென்றி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.




Click it and Unblock the Notifications
