கைவிட்ட தவெக அரசு? நாங்க இருக்கோம்! பாரதிதாசனுக்கு தைரியம் கொடுத்த திமுக முன்னாள் எம்பி
சென்னை: தமிழக அரசின் கல்வி உதவித்தொகையை நம்பி மலேசியாவில் உயர்கல்வி படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பாரதிதாசன், உதவித்தொகை முழுமையாக கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து தவெக அரசு உதவவில்லை எனில், நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம் என்று திமுக முன்னாள் எம்பி டாக்டர் செந்தில்குமார் கூறியிருக்கிறார். அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.
மாணவர் பாரதிதாசனுக்கு இன்னும் கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்படாது, எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன பிரச்சனை?
மாணவர் பாரதிதாசன், தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இப்படி இருக்கையில் நேற்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "நான் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உதவித்தொகையை கேட்டு வருகிறேன். ஆனால், எனக்கு இப்போது வரை உதவித்தொகை கிடைக்கவில்லை. எனவே என்னை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றும் நிலை உருவாகியிருக்கிறது.
ரோஹித் வெமுலாவுக்கு நடந்தது
அரசிடமிருந்து எனக்கு தொடர்ந்து மெயில்கள் வந்துக்கொண்டிருந்தன. ஆனால், இன்னும் உதவித்தொகை மட்டும் வரவில்லை. ஆராய்ச்சிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கியது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இவையெல்லாம் ஆராய்ச்சிக்காகத்தான் வாங்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். என்னை படிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா? ரோஹித் வெமுலாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கிறது" என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார்.
அரசு நடவடிக்கை எடுக்கணும்
இந்த வீடியோ பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. ஒரு பக்கம் மாணவர் கண்ணீர் மல்க உதவி கேட்க.. மறுபக்கம், தமிழக அரசு போதிய நிதியை விடுவித்துவிட்டது என்றும், கூடுதல் நிதிக்காக பல்கலைக்கழகத்தின் பரிந்துரையையும், விளக்கத்தையும் கேட்டிருக்கிறோம். அது கிடைத்தவுடன் நிதி விடுவிக்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது. தவெக அரசின் விளக்கம் எதிர்க்கட்சிகளை கொந்தளிக்க வைத்தன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாணவரின் கல்வியை தொடர அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
திமுக வெறுமென கோரிக்கைகளை, வலியுறுத்தல்களை மட்டும் முன்வைப்பதில்லை.. மாற்று தீர்வுகளையும் முன்வைக்கும் கட்சி என்பது மாணவர் விஷயத்தில் தற்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருப்பதாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.
அதாவது தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக முன்னாள் எம்பியான டாக்டர் செந்தில்குமார், "தற்போதைய அரசு உதவ முன்வரவில்லை என்றால் கவலை வேண்டாம். கல்விக்கு என்றென்றும் உதவ நாங்கள் தயார்" என்று பதவிட்டிருக்கிறார்.
திமுகவின் உதவி
மற்ற நபர்களை போல, வெறுமென வாய் வார்த்தைக்கு உறுதி கொடுப்பவர் கிடையாது டாக்டர் செந்தில்குமார். சாமானிய மக்களின் மருத்துவ செலவுகளை தானாக முன்வந்து பலமுறை ஏற்றுக்கொண்டிருக்கிறார். எந்த அமைப்பு, எந்த கட்சி என பாகுபாடு இல்லாமல்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் பலமுறை உதவிகளை செய்திருக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், 2019-2024 வரைதான் இவர் எம்பியாக இருந்தார். எம்பியாக இருந்த காலத்தில் செய்த உதவியை விட, பதவியில் இல்லாதபோது செய்த உதவிகள்தான் அதிகம். அந்த வகையில், இந்த முறை அவர் வாக்குறுதி கொடுத்திருப்பதால், நிச்சயம் மாணவரின் கல்வி செலவுக்கு உதவுவார் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் அந்த அளவுக்கு இந்த விஷயத்தை பிரச்சனைக்குரியதாக தவெக அரசு மாற்றிவிடக்கூடாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
