விஜய் கட்சிக்கு.. ஆதவை அனுப்பியதே திருமாதானா? திமுகவில் எழுந்த திடீர் விவாதம்.. ஏன்? என்னாச்சு?
சென்னை: த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரானதையடுத்து, மாற்றுக்கட்சி தலைவர்களில் திருமாவளவனை முதலில் சந்தித்து ஆதவ் அர்ஜுனா வாழ்த்துப்பெற்றுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் கட்சிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவும் இதில் விதிவிலக்கு இல்லை. ஆனால், அந்த பரபரப்பு ஆதவ் மீது அல்ல; திருமா மீது என்கிறார்கள்.
திமுகவுக்கும், உதயநிதிக்கும் எதிராக ஆதவ் கம்பு சுழற்றியதில் திமுக செம காட்டமானது. திமுக கொடுத்த நெருக்கடியை தொடர்ந்துதான் விசிகவிலிருந்து ஆதவ்வை இடை நீக்கம் செய்தார் திருமா. திமுகவின் அழுத்தத்துக்கும், ஆதவ் அர்ஜுனா தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் எங்கள் தலைவர் திருமாவளவன், ஆதவ்வை நீக்கினார்.

திமுகவை திருப்திப்படுத்த வேண்டும் என்பதைத் தாண்டி ஆதவ் மீதான எந்த கோபமும் எங்கள் தலைவருக்கோ நிர்வாகிகளுக்கோ இல்லை. திமுக ஆதரவாளர்களாக சிலர் இருக்கின்றனர். அவர்களைப்பற்றி தலைவர் கவலைப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், 2026- தேர்தலில் எங்கள் வேட்பாளர்களுக்கான நிதி ஆதாரமே ஆதவ் தான்.
அப்படியிருக்க, அவரை கட்சியிலிருந்து முற்றிலும் துடைத்தெறிந்து விட முடியாது. இந்த 6 மாத காலமும் சிறுத்தைகளுக்கான அடிப்படை கட்டமைப்ப்புகளை வலிமைப்படும் தேர்தல் யுக்திகளுக்கான பணிகளை சீக்ரெட்டாக செய்து வருமாறு அவருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால், வெளித் தோற்றத்துக்குத்தான் ஆதவ் நீக்கப்பட்டுள்ளாரே தவிர, புறத்தில் அவர் கட்சி பணிகளை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதனால் தான் நிர்வாகிகளும் அவருடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள், என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் 6 மாதம்தான் விலகி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகினார் ஆதவ் அர்ஜுனா. அதோடு தற்போது தமிழக வெற்றிக் கழகத்திலும் உறுப்பினராக ஆதவ் அர்ஜுனா சேர்ந்துள்ளார்.
இது குறித்து கேள்வி எழுந்தபோதெல்லாம், திமுக எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை; எங்க கட்சியின் உயர்நிலை செயற்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுபடிதான் நீக்கப்பட்டார் என்றே சொல்லி வந்தார் திருமாவளவன். திமுக நெருக்கடி கொடுக்கவில்லை என அவர் சொல்லியதை திமுக தலைமை நம்பியது.
ஆனால், தற்போது தன்னை ஆதவ் சந்தித்தப்பிறகு திருமா கொடுத்த பேட்டியும், ஆதவ் கொடுத்த பேட்டியையும் கவனித்த திமுக தலைமை, இடைநீக்கம்ங்கிறது கண் துடைப்பா? ஒருவேளை திருமாவின் ஆசியுடன் தான் விஜய் கட்சியில் அந்த பையன் (ஆதவ்) சேர்ந்திருப்பாரோ? விஜய் கட்சிக்கு அந்த பையனை திருமாதான் அனுப்பி வைத்திருக்கிறார் என்று கசப்புடன் விவாதிக்கிறதாம் திமுக தலைமை.
அதற்கேற்ப, திமுக கூட்டணியில் விசிக பிரச்சனையை கவனிக்கும் அந்த மூத்த அமைச்சரும், திமுக தலைவரிடம் திருமாவுக்கு எதிராக பேசியிருக்கிறார். வேங்கைவயல் உள்பட பல்வேறு சம்பவங்களில் சமீப நாட்களில் திமுக ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை சொல்லி வரும் திருமா, விஜய் கட்சியில் ஆதவ் இணைந்ததையும் தன்னை வந்து சந்தித்ததையும் அரசியல் நாகரீகம் என வியாக்கியானம் சொல்வதை திமுக தலைவர்கள் கசப்பாகத்தான் பார்க்கிறார்கள். அப்படி கசப்பாகச் பார்க்கும் அவர்கள், அரசியல் நாகரீகம் வளர வேண்டும் என திருமா சொல்வது உண்மையானால், பாஜக மற்றும் பாமக தலைவர்கள் தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொண்டு அரசியல் நாகரீகத்தை உயர்த்திப்பிடிப்பாரா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications