விழித்து கொண்ட விஜய்? தவெக எதிர்காலம் என்ன? அதிமுகவை புறக்கணித்தது சரியா?
சென்னை: அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கடந்த ஒரு மாத காலமாக விவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தவெக பொதுச்செயலாளர் இப்போது அறிக்கை வெளியிட்டுள்ளது ஏன்? இவ்வளவு தாமதமாக முடிவு எடுத்து அறிவித்திருப்பது ஏன்?
கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய விஜய், திராவிட மாடல் ஆட்சியை மட்டுமே விமர்சித்துப் பேசி இருந்தார். ஆகவே, பலரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என்று பேசத் தொடங்கினர். விவாத களம் அதிமுகவுக்கும் விஜய்க்கு ஒரு மறைமுகமான கூட்டு இருப்பதாகவே சூடு பிடித்து வந்தது.

அப்படி என்றால் யார் முதல்வர் வேட்பாளர்? எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக விஜய் ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அதிகாரத்தில் பங்கு என விஜய் மாநாட்டில் பேசியதால், ஒருவேளை அதற்காகக் கதவை அதிமுக திறக்கலாம் என்று சொல்லப்பட்டது.
இதனிடையே தான் கட்சி தொடங்குவதற்கு முன்புவரை விஜய்க்குக் கண்மூடித் தனமான ஆதரவை அளித்துவந்த சீமான், திடீரென்று தவெகவையும் அக்கட்சியின் நிறுவனரையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேச ஆரம்பித்தார். விசிக ஒருவேளை தவெக பக்கம் தாவலாம் என்றும் சொல்லப்பட்டதை திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்தார். ஆக, தவெக ஒருவகையில் தனித்துவிடப்பட்ட நிலையில் அதிமுக மட்டுமே மவுனமாக இருந்து வந்தது.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என தான்தோன்றித் தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று அறிக்கை வெளியிட்டு மறுத்துள்ளார். மேலும் அவர், 'பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெக குறிக்கோள்' என்றும் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்டக் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய இந்த விவாதம் 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இத்தனை நாட்களாக மிகப்பெரிய ஊடகங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டும் வந்தன. அதை எல்லாம் விஜய் கண்டுகொள்ளவே இல்லையா? இவ்வளவு தாமதமாக ஒரு முடிவை எடுத்து அறிவிக்க வேண்டிய நிலை இப்போதுதான் வந்துள்ளதா? எனப் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசுகையில், "புதியதாக வரக்கூடிய கட்சி தனது பலத்தை மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அப்படித்தான் விஜயகாந்த் கடந்த 2006இல் தன் பலத்தை நிரூபித்தார். கமல்ஹாசன் 2019இல் தன் கட்சியின் பலத்தை நிரூபித்தார். 2016 ஆம் ஆண்டு சீமான் தன் பலம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டினார். அப்படித்தான் 2026இல் விஜய்யும் அவரது பலத்தை நிரூபித்துத்தான் ஆகவேண்டும். அப்படி நிரூபித்தால்தான் ஒரு அரசியல் கட்சிக்கு மரியாதை ஏற்படும். தன் கைக்கு வராத ஓட்டை யாரும் யாருக்கும் மாற்றிக் கொடுக்க முடியாது. கூட்டம் என்பது வேறு. நிரூபிக்கப்படும் வாக்கு என்பது வேறு.
ஒரு அரசியல் கட்சி தன் பலம் என்ன என்பதை நிரூபித்த பிறகே கூட்டணிக்குச் செல்ல முடியும்? அதற்கு முன்பே கூட்டணிக்குப் போனால் அந்தக் கட்சிக்குத்தான் இழுக்கு. வாக்கு சதவீதத்தை நிரூபிக்காமல் கூட்டணி அமைத்தால் அது விஜய்க்கும் இழுக்காகவே முடியும். விஜய்யின் தொண்டர்கள் அவரை முதல்வர் என்பதைச் சொன்னால்தான் ஏற்பார்கள். அவர் எடப்பாடியுடன் கூட்டணி வைத்து அவரை முதல்வர் என்றால் ஏற்க மறுப்பார்கள்.
இப்படித்தான் சினிமாவில் இருந்து வந்து கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன் சென்னையில் பெரிய மாநாட்டை நடத்தினார். ஜானகி அம்மாவை முதல்வர் என்று அவர் அறிவித்தார். அது அவருக்குப் பின்னடைவையே கொடுத்தது. இப்போது புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளதுதான் அவரது தொண்டர்களின் எண்ணவோட்டமாக உள்ளது. இதற்கு முன்பாக விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக வாதங்கள் வைக்கப்பட்ட போது விஜய் அதை மறுக்காமலிருந்து வந்தார். மிகத் தாமதமாக இப்போது அதை ஆனந்த் மறுத்துள்ளார்.
ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்து விஜய் விலை போய்விடுவார் என விமர்சனம் எழுந்த நிலையில் இப்போதுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆனந்த். இது பற்றி நான் பல முறை கேள்வி எழுப்பி இருந்தேன். அப்போது எல்லாம் மவுனமாகவே இருந்துவந்தார் விஜய். இதை விஜய்யே மறுத்துப் பேசி இருந்தால், கூடுதல் பலம் கிடைத்திருக்கும். ஆனாலும் இப்போதாவது விழித்துக் கொண்டாரே விஜய்" என்கிறார்.












Click it and Unblock the Notifications