“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை!
சென்னை: விஜய் தலைமையிலான தவெகவை கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக தலைமை தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் அதிமுக கூட்டணியில் இணையப்போகிறாரா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலகலப்பாக ரிப்ளை கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக, கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு தருவோம் என ஆஃபர் கொடுத்தது. ஆனால், எந்தவொரு கட்சியும் தவெக உடன் கூட்டணிக்கு செல்லவில்லை. இதனால் தற்போது வரை தவெக தனித்தே நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து முதலில் தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டு முறை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
முன்னதாக, கரூர் துயர சம்பவத்தின் போது அதிமுக, பாஜகவினர் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தனர். மேலும், திமுக அரசின் அலட்சியம் தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் எனவும் அவர்கள் விமர்சித்தனர். இதனால் அதிமுக - தவெக இடையே கூட்டணி உருவாகுமா? என்ற பேச்சுகளும் அப்போது அடிபட்டன.
குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற ஒரு கூட்டத்தில், தவெக கொடி பறந்தது முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், நம் கூட்டணிக்கு பிரமாண்டமான கட்சி வருகிறது எனக் கூறி வந்தனர். அந்த சமயத்தில், தவெகவும் அதிமுகவை எதிர்க்காமல் இருந்தது கவனிக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் விஜய் விமர்சித்து வருகிறார். திமுகவை தீய சக்தி என்றும், அதிமுகவை ஊழல் சக்தி எனவும் அவர் விமர்சித்தார். இந்நிலையில், தான் தற்போது திமுகவின் மெகா கூட்டணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் என்டிஏ கூட்டணியில் தவெகவை இணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றிருக்கும் தவெகவை கூட்டணியில் இணைத்தால் பெரும் பலமாக இருக்கும் என பாஜக கருதுவதாக தெரிகிறது. எனவே, தவெகவை கூட்டணியில் இழுப்பதற்காக பாஜக டெல்லி தலைமை காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
என்டிஏ கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைவது தொடர்பாக ஜன சேனா தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தவெகவுக்கு 40 சட்டசபை தொகுதிகளையும், துணை முதல்வர் பதவியையும் வழங்குவதாகவும் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது,
இந்நிலையில் தான், கரூர் விவகாரம் குறித்து விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த நேற்று ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. என்டிஏ கூட்டணியில் சிபிஐ மூலமாக விஜய்க்கு நெருக்கடி கொடுக்கவே இவ்வாறு மீண்டும் சம்மன் அனுப்பப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த விசாரணைக்கு விஜய் ஆஜராகவில்லை.
இந்நிலையில், திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அங்கு விரைந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் இன்று காலை திருச்சி சென்றார். அவரிடம் செய்தியாளர்ள் பிரதமர் மோடி வருகை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் நிருபர்களை பார்த்து கொஞ்சம் தள்ளுறீங்களா தம்பி, நான் இப்பதான் வரேன். அப்புறம் பேசிக்கலாம் என்றார்.
எனினும், செய்தியாளார்கள் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவதாக தகவல் வெளியாகியுள்ளதே? என்று கேட்டனர். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், "என்னை மாட்டிவிட்டு கட்சியில் இருந்து நீக்கப் பாக்குறீங்களா?" என சிரித்தவாறே பதில் அளித்து விட்டு அங்கிருந்து சென்றார். அவரது இந்த பேட்டி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
