Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும் அதிர்ச்சி! இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 48.. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரது உடல் சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. ஸ்டுடியோக்களில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவை அதில் இருந்து கிராமங்களுக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், வேதம் புதிது, கருத்தம்மா என இவர் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் ஒரு மைல்கல்.

Bharathiraja Manoj Bharathiraja

மனோஜ் பாரதிராஜா

இவரது மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் தமிழ் சினிமாவில் தாஜ் மஹால் படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா தனது மகனை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். பெரும் எதிர்பார்ப்புடன் 1999ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இருப்பினும், அந்த படம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு சில படங்களில் நடித்த மனோஜ் பாரதிராஜா, பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தார்.

இதற்கிடையே சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) இன்று மாலை காலமானார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரையும் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனோஜ் பாரதிராஜா உடல்நிலை

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மனோஜ் பாரதிராஜாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறது. அப்போது முதலே வீட்டில் இருந்து அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மனோஜ் பாரதிராஜா மறைவு

இதையடுத்து மனோஜ் பாரதிராஜா மாலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு வரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் தற்போது சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் . இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

யார் இந்த மனோஜ் பாரதிராஜா

தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமான மனோஜ் பாரதிராஜா, அதன் பிறகு சமுத்திரன், பல்லவன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும், அவரது நடிப்பிற்குப் பெரியளவில் வரவேற்பு கிடைக்காததால் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். அதன் பிறகு இயக்குநர்கள் மணிரத்தினம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநர்களாகவும் சில காலம் பணியாற்றினார்.

2005ம் ஆண்டு அவர் சாதுரியன் படத்தில் நடித்து வந்தார் அப்போது உடன் நடித்த நடிகை நந்தனா என்ற நடிகையை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்த்திகா, மதிவதனி என 2 மகள்கள் உள்ளனர். சாதுரியன் படத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்த மனோஜ், சமீப காலமாக மீண்டும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். கடைசியாக அவர் 2022ல் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+