அவங்க வீட்டு பொண்ணு! இதுல என்ன தப்பு? வள்ளி கும்மி சாதிய உறுதிமொழி சர்ச்சை! மோகன் ஜி சொன்னதை பாருங்க
சென்னை: ஈரோட்டில் நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஆண்களையே திருமணம் செய்து கொள்கிறோம் என சாதிய உறுதிமொழி எடுக்க வைத்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறியிருக்கும் கருத்துக்கள் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில், கொங்குநாடு கலைக்குழு என்ற பெயரில் குழு அமைத்து வள்ளி கும்மி பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஈரோட்டில் இக்கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பெண்களிடம் உறுதிமொழி ஒன்று பெறப்பட்டது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவிய பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதாவது குறிப்பிட்ட சமூத்தை சேர்ந்த ஆண்களை மட்டும் திருமணம் செய்து கொள்வோம் என பெண்களிடம் பாலு உறுதிமொழியை பெற்றிருந்தார்.இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது சாதியத்தை வளர்க்கும் முறை என்று விசிக சார்பில் வெளிப்படையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திரைப்பட இயக்குநர் மோகன்ஜி கூறியுள்ள கருத்துக்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன. செய்தியாளர்களுக்கு அளித்த அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,
"இது ஒரு தேவை இல்லாத சர்ச்சை. அவங்க வீட்டுப் பெண்களுக்கு அவங்க கலைக்குழு நடத்துறாங்க. கொங்கு கலைக்குழு எனும் பெயரில் அவர்கள் 2000 இளைஞர்களுக்கு தங்களது பாரம்பரிய நடனத்தை பயிற்றுவிக்கிறார்கள். இதில்தான் சத்திய பிரமாணம் வாங்குவதை போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் எந்த தவறும் இருப்பதைப் போன்று எனக்கு தெரியவில்லை.
அவர்கள் வீட்டு பெண்களை அவர்கள் பாதுகாப்பதில் என்ன தவறு இருக்கிறது? அவர்களுடைய கலாச்சாரத்தை பாதுகாக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் பின்பற்றி வரும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அவர்கள் விரும்புகிறார்கள். இது இவ்வளவு பெரிய சலசலப்பாக வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனத் தூய்மை வாதம் என்பது எப்பொழுதுமே தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது.
இங்க எதுவும் தவறு கிடையாது. ஒரு பக்கம் அவர்கள் விரும்பும் பெண்களையோ ஆண்களையோ திருமணம் செய்து கொள்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இந்தியா முழுவதும் இதை யாரும் எதிர்ப்பது கிடையாது. அதேபோல இந்த உறுதிமொழி பெற்ற விவகாரம் அவர்களுடைய உரிமையாகதான் நான் பார்க்கிறேன்.
2000 ஆண்டுகளாக நாம் இன குழுக்கள், சாதிய குழு, குடி போன்றவற்றை பின்பற்றி கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் கடந்த 25-30 ஆண்டுகளாக இவை அனைத்தும் தவறு என்பதை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து இயங்கும் சில குழுக்கள் நம்முடைய நாட்டின் பண்பாட்டு கலாச்சார கூறுகளை சிறு தெய்வ வழிபாட்டை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் ஊடுருவி இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications