Seeman Vs Periyar: சீமான் அரசியல் செய்யவும் தேவைப்படும் பெரியார் எவ்வளவு பெரிய பெரியார்-பார்த்திபன்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அரசியல் செய்வதற்கும் தேவைப்படுகிறார் எனில் தந்தை பெரியார் எவ்வளவு பெரிய "பெரியார்" என்று திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் பெரியாரை சீமான் சிறியாரை ஆக்குவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்றும் இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.
சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு இயக்குநர் பார்த்திபன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு தெரிந்து நண்பர் சீமான், இயக்குநரை எல்லாம் மீறி பெரிய அரசியல்வாதியாகிவிட்டார். அரசியலில் அவரது பார்வைக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கலாம்.

சீமான், பெரியாரை ஏன் கொஞ்சம் சிறியாராக ஆக்குகிறோம் என்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம். இந்த காரணத்தை நாம் ஏற்றி ஏற்றிவிட்டு அதில் சாம்பிராணி போட்டு புகைக்க வைப்பதை விட்டுவிட்டு அதை அவாய்ட் (தவிர்த்துவிடுதல்) பண்றது பெட்டர் (நல்லது) என எனக்கு தோன்றுகிறது. இன்னும் இந்த புகைச்சல் அதிகமாகாமல் இருப்பதற்காக..
பெரியார் எவ்வளவு பெரிய பெரியாராக இருந்தால் இன்றைக்கும் அரசியலுக்கு அவர்தான் தேவைப்படுகிறார்.. இன்றைக்கு நண்பர் சீமான் அரசியல் செய்வதற்கும் பெரியார்தான் தேவைப்படுகிறார் எனில் அப்ப எவ்வளவு பெரிய பெரியார்? இவ்வாறு இயக்குநர் பார்த்திபன் கூறினார்.
பெரியாரை இழிவுபடுத்தும் சீமான்
கடந்த சில மாதங்களாக தந்தை பெரியாரை தமிழருக்கு எதிரானவராக சீமான் முன்னிறுத்தி விமர்சனம் செய்து வருகிறார். தமிழ்ச் சமூகத்தை சீரழித்தவர் பெரியார் என்றும் பேசி வருகிறார் சீமான். இதனால் அண்மையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அமைப்பினர் சென்னையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் பெரியாரை இழிவுபடுத்தியதால் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டுகளை வீசுவேன் எனவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த உள்ளனர். இந்த பின்னணியில் பெரியாருக்கு ஆதரவாக இயக்குநர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications