முருகனுக்கு எதிரானவர் இல்லையா.. இயக்குநர் அமீருக்கு இந்து மதத்திற்குள் என்ன வேலை.. பேரரசு ஆவேசம்!
சென்னை: மதுரையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர், இங்குள்ள யாரும் முருகனுக்கு எதிரானவர்கள் அல்ல.. முருகன் பெயரால் கலவரம் செய்ய துடிக்கும் சங்கிகளுக்கு எதிரானவர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குநர் பேரரசு, வேற்று மதத்தவரான அமீருக்கு இந்து மதத்திற்குள் என்ன வேலை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் இந்து முன்னணி சார்பாக நாளை முருகன் மாநாடு நடக்கவுள்ளது. ஏற்கனவே மாநாட்டுக்கான பணிகள் முடிக்கப்பட்டு, பக்தர்கள் பலரும் வருகை தர தொடங்கி இருக்கின்றனர். நாளை நடக்கவுள்ள மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மனித சங்கிலி போராட்டம்
இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் கட்சிகள் கடந்து இயக்குநர் அமீரும் கலந்து கொண்டார். அப்போது இயக்குநர் அமீர் பேசுகையில், இந்த மனித சங்கிலியின் நோக்கம், முருகன் எங்களுக்கு எதிரானவர் அல்ல. முருகன் பெயரால் அரசியல் செய்யும் சதிகாரர்கள் தான் எங்களுக்கு எதிரானவர்கள்.
இயக்குநர் அமீர் பேட்டி
இங்கு கூடியுள்ள யாருமே முருகனுக்கு எதிரானவர்கள் அல்ல. முருகன் பெயரால் கலவரம் செய்ய துடிக்கும் சங்கிகளுக்கு எதிரானவர்கள் என்பதைதான் சொல்வதாக தெரிவித்தார். அமீரின் பேச்சு சோசியல் மீடியாவில் பெரியளவில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் இயக்குநர் அமீருக்கு இயக்குநரும், பாஜக நிர்வாகியுமான பேரரசு பதில் அளித்துள்ளார்.
பேரரசு பதில்
அதில் பேரரசு பேசுகையில், இன்னொரு மதத்திற்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு இயக்குநர் அமீர் இல்லை. அதனை இஸ்லாமியரான அமீர் செய்யக் கூடாது. இந்து மதத்தில் இருந்து, தெய்வ பக்தி இருந்து பொதுவாக கருத்து சொல்கிறார் என்றால் சிந்திப்போம். ஆனால் அமீர் வணங்குவது வேறொரு மதம். அதனால் அமீருக்கு இந்து மதத்திற்குள் என்ன வேலை.
மதவாதி
இந்து மதத்தில் இருந்து கொண்டு கடவுளை விமர்சிப்பவன் நாத்திகன். வேறு மதத்தில் இருந்து கொண்டு இந்து மதத்தை விமர்சிப்பவன் மதவாதி என்றும் தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீர் பல்வேறு தருணங்களிலும் அரசியல் கருத்தை கூறி இருக்கிறார். அவர் மீது பேரரசு மதவாதி என்ற விமர்சனத்தை வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications