ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. திருநெல்வேலி எம்.பி ஞான திரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ்
சென்னை: கட்சியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் புகார் வந்த நிலையில், திருநெல்வேலி எம்.பி ஞான திரயவத்திற்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக எம்.பி ஞானதிரவியம். இவர் திருநெல்வேலியில் உள்ள சி.எஸ்.ஐ மண்டலத்தில் பொறுப்பாளாராகவும் இருந்துள்ளார். ஜான்ஸ் பள்ளியில் தாளாளராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பேராயராக இருக்கும் பர்னபாஸ் என்பவருக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.
இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் நிற்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான மோதலில், பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தில் சில அறைகளை ஞானதிரவியம் தரப்பினர் பூட்டு போட்டு பூட்டிச் சென்றனர். எனவே, அந்த அறைகளை மீண்டும் திறக்க வேண்டும், அலுவலக பணிகளை முடக்க கூடாது என்று பேராயர் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பான மோதலில் நேற்று பேராயார் காட்பிரே நோபுள் என்பவர் தாக்கப்பட்டார். இதையடுத்து காட்பிரே நோபுள் நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். முன்னதாக திமுக எம்.பி ஞான திரவியம் மீது குற்றம் சாட்டி காட்பிரே நோபுள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அதில், ஞானதிரவியம் தனித்து செயல்படுவதாகவும் திமுக தலைமை இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று காட்பிரே நோபுள் தாக்கப்பட்ட விவகாரம் நெல்லை திருமண்டலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக எம்.பி மீது அடுத்தடுத்து புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:-
கழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமை கழகத்திற்கு ஞானதிரவியம் மீது புகார்கள் வரப்பெற்றுள்ளது. இச்செயல் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இக்கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விளக்கம் அளிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்க தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications