21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன் பெற்றவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நடப்பாண்டும் இத்தகைய பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்குகிறது.

பொங்கல் பரிசு பொருட்கள்
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மொத்தம் 20 பொருட்கள், முழு கரும்பு ஆகியவற்றை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் மஞ்சள் துணிப்பை வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 2,15,48,060 குடும்பங்களுக்கு இப்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான செலவு ரூ1,088 கோடியாகும்.

டோக்கன் முறையில் விநியோகம்
ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு பைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் கொரோனா பரவல் காலம் என்பதால் ரேஷன் கடைகளில் கூட்டம் ஏற்படாத வகையில் டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன்கள் அடிப்படையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன்கள் அடிப்படையில் இப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
Recommended Video

கட்டுப்பாடுகள் அவசியம்
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும். அவர்களுக்கும் 20 பொருட்கள், முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications