விவாகரத்து வழக்கு.. ரூ.100 கோடி சொத்து வழக்கு.. மூச்சுத் திணறுகிறாரா விஜய்?
சென்னை: தனது தேர்தல் பரப்புரையை வெற்றிகரமாக இன்று முடித்துள்ள விஜய்க்கு, அடுத்த கட்டமாக அவரை முடக்க வழக்கு மேல் வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. தான் ஏன் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தேன் என்பது தொடங்கி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கரூர் சம்பவத்திற்குப் பின்னால் என்ன நடந்தது என்பது வரை இன்றைக்குச் சென்னையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கொட்டி தீர்த்துவிட்டார் விஜய்.
இதுவரை பிரச்சாரக் களத்தில் விஜய், மிக நீண்ட நேரம் தெளிவாகப் பேசியதே இல்லை. அவர் என்ன பேச நினைத்து வந்தாரோ அதை மறந்துபோய், ஒன்று பேசாமலே திரும்பியும் இருக்கிறார். ஆனால், இன்றைக்கு நான் ஸ்டாப் ஆக விஜய் மிக ஆவேசமாகப் பேசினார்.

தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பொய்யானவை அது 'கடுப்பில் விட்ட கணிப்பு' என்று அவர் புதிய வார்த்தையால் வசைபாடி இருக்கிறார். தனக்கு 50 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என்ற ஒரு கருத்தை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். அதில் உண்மையில்லை என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் வயது வாரியாக வெளியிட்டுள்ள வாக்காளர்களில் தனக்கான ஆதரவாளர்கள் எவ்வளவு உள்ளனர் என்பதை விளக்கமாக எடுத்துப் பேசினார் விஜய்.
விஜய் அரசியல் களத்திற்கு வந்த பிறகு அவர் மீது பல்வேறு விமர்சனங்கள். அதை இன்று சுட்டிக்காட்டிய விஜய், தன்னை எதிர்ப்பதில் அனைத்துக் கட்சிகளில் ஓரணியில் சேர்ந்துள்ளதை எடுத்துக் காட்டினார். பாஜக தனக்கும் தவெகவுக்கும் கொள்கை எதிரி என்பதையும் 'எல்லா மதமும் நம் மதம்' என்ற வாசகத்தையும் அவர் வாக்காளர் மத்தியில் பதியவைத்துவிட்டு, தன் கடைசி பிரச்சாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
தேர்தல் நெருங்க நெருக்க விஜய்யை விடாமல் வழக்குகள் கூட துரத்தி வருகின்றன. முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடந்த கரூர் சம்பவ வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான அவர், யாருமே எதிர்பார்க்காத விதமாக மனைவியிடம் விவாகரத்து வழக்கை எதிர்நோக்கினார். அதுவரை காதும் காதும் வைத்த மாதிரி குசுகுசு என உலாவி வந்த இந்த விவகாரம் அவரது மனைவி செங்கல்பட்டு நீதிமன்றத்தை நாடிய போது பூதாகரமாக வெளிச்சத்திற்கு வந்தது.
அதை எப்படிச் சமாளிக்கப் போகிறார் எனப் பலரும் நினைத்தபோது, அவர் பொதுவெளியில் சர்ச்சைக்குக் காரணமான நடிகையுடன் திருமண விழா ஒன்றில் பங்கேற்றார். அதன் மூலம் பலரது வாயை அடைத்துவிட்டார் விஜய் என அவரது ஆதரவாளர்கள் கருத்துக் கூறினர்.
அதன் பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்ததில் வயது விவகாரம் சர்ச்சையானது. அதன் பின்னர் அவர் அதற்காக வேட்பு மனுவை மாற்றித் தாக்கல் செய்தார்.
இந்நிலையில்தான் அவரது வேட்புமனுவில் சொத்துக் கணக்கை 100 கோடி குறைத்துக் காட்டியுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், "சொத்து மதிப்பை 100 கோடி குறைத்துக் காட்டியது முறைகேடானது" என்று தெரிவித்துள்ளது.
இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் கண்டுள்ளார். பெரம்பூரைச் சேர்ந்த வாக்காளர் விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், விஜய் சொத்து மதிப்பில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனக் கூறி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் என்று தெரிவித்திருந்த விஜய், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுவில் 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் எனத் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள சொத்து மதிப்பில் வேறுபாடுகள் உள்ளன. ஆகவே உண்மையை விசாரிக்க வேண்டும்" என அவர் கேட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.தர்மாதிகாரி மற்றும் ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு சொத்து விவரங்களைக் குறைத்துக் காட்டியுள்ளது முறைகேடுதான் என்றும் இதற்கு வருமான வரித்துறை பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளி வைத்துள்ளது.
இந்த வழக்கு ஒருபக்கம் விஜய்க்கு நெருக்கடியாக மாறியுள்ள தருணத்தில் மற்றொரு பக்கம் விவாகரத்து வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், அதில் விஜய் ஆஜராகவில்லை. பிரச்சார களத்தில் ஈடுபட்டு வருவதால் தன்னால் தற்போது ஆஜராக முடியவில்லை என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆகவே ஜூன் 15 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அவர் தேர்தல் வாக்குப் பதிவான 23 ஆம் தேதிக்கு முன்னதாக இருந்த ஒரு வழக்கு நெருக்கடியைச் சமாளித்துவிட்டார். தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே அவரது விவாகரத்து வழக்கை அவர் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
அதற்கு முன்னதாக இந்த சொத்து குறைப்பு வழக்கை விஜய் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
இதனிடையே விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "விஜய் விவாகரத்து எப்போதோ இந்த விவகாரம் முடிந்து இரண்டு தரப்புக்கும் சமரசமாகிவிட்டது. அந்த விவகாரத்தை இப்போது அரசியல் காரணத்திற்காகச் சிலர் கையில் எடுத்துள்ளனர். மற்றவர்களின் குணாதிசயத்தைச் சிதைப்பதில் அவர்கள் பிஹெச்டி முடித்தவர்கள்" என்று மறைமுகமாக இந்த விவாகரத்து விஷயத்தைப் போட்டு உடைத்துள்ளார்.
ஆக, எப்போதோ விஜய் தன் மனைவியை விட்டு விளக்கிவிட்டார் என்பதையும் அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து தொடர்பான கையெழுத்துப் போடப்பட்டுவிட்டது என்பதையும் உறுதி செய்துள்ளார் சந்திரசேகர். நீதிமன்றத்திற்கு வராமல் எப்படி ஒருவர் விவாகரத்து விஷயத்தில் தானே முடிவு செய்ய முடியும்? அதற்கான சமரசம் எங்கே நடந்தது என்பதைப் பற்றிப் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
அதுவும் தேர்தல் அரசியலில் ஈடுபடும் வரை விஜய்யோ அவரது குடும்பத்தினரோ அதை ஏன் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தனர் என்பதும் புரியாத புதிராக உள்ளது என்கின்றனர் திரையுலகைச் சேர்ந்தவர்கள்.
- கடற்கரய்












Click it and Unblock the Notifications