புரட்டாசி முடிகிறது! தீபாவளிக்கு குவியும் பிரியாணி ஆர்டர்! இந்த ஆண்டு சேல்ஸ் அதிகரிக்கும்!
சென்னை: புரட்டாசி மாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில் தீபாவளிக்கு கறி விருந்து சாப்பிட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பிரியாணிக்கான ஆர்டர்களை பலர் கொடுத்து வருகிறார்கள். இதனால் இந்த ஆண்டு பிரியாணி விற்பனை மட்டும் ரூ 250 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, இனிப்புகளுடன் சேர்த்து கறி விருந்தும் இடம்பெறுகிறது. அதிலும் தீபாவளிக்கு காலையிலேயே இட்லி, ஆட்டுக் கறி குழம்பு, மதியம் கோழிக் குழம்பு, மீன் வறுவல், மட்டன் சுக்கா என அசத்துவது வழக்கம்.

அதிலும் பலர் கறி குழம்பிற்கு பதிலாக மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டு வருகிறார்கள். அப்போதெல்லாம் பிரியாணிக்கான மசாலாவை அம்மியில் அரைத்து பயன்படுத்துவார்கள். இதனால் அவர்களது வீடு முழுவதும் பிரியாணி வாசம் வீசும்.
ஆனால் இப்போது எல்லாவற்றிற்கும் மசாலா வந்துவிட்டது. இதனால் எளிதாக அந்த மசாலாவை போட்டு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பலர் பிரியாணிக்கு உயிரை விடும் அளவுக்கு விரும்பியாக இருக்கிறார்கள் என சொல்லலாம்.
சென்னையில் பெரும்பாலும் பாஸ்மதி அரிசியில் செய்யப்பட்ட பிரியாணிதான் ஃபேமஸ். ஆனால் மற்ற மாவட்டங்களில் சீரக சம்பா அரிசி பிரியாணி விற்பனைதான் அதிகம் இருக்கிறது. இந்த அரிசியில் செய்யும் பிரியாணிக்கு கூடுதல் சுவை என்கிறார்கள். அது போல் பாஸ்மதி அரிசி போட்டு செய்தால் வாசனை கமகமக்கும் என்கிறார்கள்.
பிரியாணியை செய்வதை விட்டுவிட்டு பலர் ஆர்டர் கொடுத்து பிரியாணி வாங்கி பண்டிகையை கொண்டாடும் நிலையில் உள்ளனர். மேலும் வீட்டில் என்னதான் பார்த்து பார்த்து பிரியாணி செய்தாலும் அதன் சுவை ஹோட்டலில் வாங்குவதை போல் இருப்பதில்லை.
இதனால் தற்போதே கடைகளில் ஆர்டர் கொடுக்க தொடங்கிவிட்டனர். ஒரு கிலோ, 2 கிலோ என்று குடும்பத்தினர் எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்கேற்ப ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக ரூ 5500 கோடியும் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் கோடிக்கும் பிரியாணி விற்பனை நடக்கும்.
கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் புரட்டாசி 1 பிறந்ததால் மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு சைவ உணவுகளை உட்கொண்டனர். புரட்டாசி இன்றுடன் முடியவுள்ள நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பிரியாணி வெளுத்து வாங்க பலர் காத்திருக்கிறார்கள்.
இதனால் உணவகங்களும் சிக்கன், மட்டன், மீன், இறால் பிரியாணிகளையும் சிக்கன் 65, மட்டன் சுக்கா உள்ளிட்டவைகளையும் விற்பனை செய்து வருகின்றன. இதற்கு ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன. இதனால் தீபாவளி பண்டிகைக்கு பிரியாணி விற்பனை 250 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications