தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. விக்கிரவாண்டி டோல்கேட்டில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!
விழுப்புரம்: தீபாவளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் பலரும் சென்னை திரும்பி வரும் சூழலில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுமார் 2 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருந்தனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு அதிகளவிலான மக்கள் படையெடுத்தனர். இதனால் தமிழக அரசு தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனிடையே தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு ஏதுவாக செவ்வாய்க்கிழமையான இன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. அதேபோல் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.
இதனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் சுமார் 2 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் 2 கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணியளவிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதால், இரவில் பயணத்தை தொடங்கும் மக்கள், திட்டமிட்டபடி காலையில் பயணத்தை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications