களமிறங்கிய டிகே சிவக்குமார்.. பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு ‛குட்பை’? போனில் முக்கிய ‛டீல்’
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக உள்பட எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு போன் போட்டு கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் பேசி அவரை ‛இந்தியா' கூட்டணிக்கு அழைத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் மத்தியில் ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 274 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவு என்பது வந்துள்ளது.

ஆளும் பாஜக கூட்டணி 350 முதல் 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் பாஜக 235 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கூட்டணி கட்சிகளை சேர்த்தால் பாஜகவின் என்டிஏ கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மாறாக ‛இந்தியா' கூட்டணியும் 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன்படி காங்கிரஸ் 98 இடங்களிலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதுதவிர பிற கூட்டணி கட்சிகளை சேர்த்து பார்த்தால் ‛இந்தியா' கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இதனால் தற்போதைய சூழலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால் பாஜகவும், ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களும் எதிரெதிர் கூட்டணியில் இருந்து ஆட்களை இழுப்பதற்கான வேலைகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் கிங்மேக்கராக சந்திரபாபு நாயுடு மாற வாய்ப்புள்ளது.
அதாவது ஆந்திராவை மையப்படுத்தி சந்திரபாபு நாயுடு அரசியல் செய்து வருகிறார். ஆந்திராவில் தற்போது லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோல் லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் கூட்டணியில் உள்ள நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா 2 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் சந்திரபாபு நாயுடுவின் உதவியை பாஜக பெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் சந்திரபாபு நாயுடுவுக்கு கர்நாடகா துணை முதல்வரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் போனில் பேசியுள்ளார். அப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்து ‛இந்தியா' கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதோடு மத்தியில் ஆளும் கட்சியாக ‛இந்தியா' கூட்டணி பொறுப்பேற்கும்போது மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாக்களை தருவதாக தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக ‛இந்தியா' கூட்டணியின் மிக மூத்த தலைவரான சரத்பவார், சந்திரபாபு நாயுடுவுடன் பேசி அவரை ‛இந்தியா' கூட்டணிக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது டிகே சிவக்குமார் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருப்பாரா, இல்லாவிட்டால் ‛இந்தியா' கூட்டணிக்கு எஸ்கேப் ஆவாரா என்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications