சிவக்குமார் முதல் செந்தில் பாலாஜி வரை.. 2019க்கு பிறகு அமலாக்க துறையிடம் சிக்கிய பிரமுகர்கள் லிஸ்ட்
சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்தியில் ஆளும் பாஜக தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக தனது விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தி வருவதாக நேரடியாகவே விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சிவசேனா கட்சிக்குள்ளும் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பாஜகவையே அக்கட்சி தலைவர்கள் கை நீட்டுகிறார்கள். இப்படி தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அந்த அனல் பரவியுள்ளது. கடந்த மாதம் சட்ட விரோத பண பாரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
இருதய பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி இன்று தான் டிஸ்சார்ஜ் ஆகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இன்று காலை தமிழகத்தின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியையும் விசாரணை வளையத்திற்குள் அமலாக்கத்துறை கொண்டு வந்துள்ளது. 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க கடந்த 2019 முதல் அமலாகக்த்துறை வசம் சிக்கிய எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் யார்? யார் என்ற விவரத்தை பார்க்கலாம்.
* கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
* அதன்பிறகு கர்நாடக காங்கிரஸ் தலைவரும் அம்மாநிலத்தின் தற்போதைய துணை முதல்வருமாக இருக்கக் கூடிய டி.கே.சிவக்குமாரை 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.
* டெல்லியில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஹவாலா பணமோசடி தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த சத்தியேந்திர ஜெயினை கைது செய்தது.
* மேற்கு வங்காளத்தில் மம்தா அமைச்சரவவையில் கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி சட்ட விரோத பணபரிமாற்ற புகாரில் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டாணி அரசில் அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
* நடப்பு ஆண்டில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
* தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணபரிமாற்ற புகாரில் அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது.












Click it and Unblock the Notifications