முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு.. அவசர வழக்காக இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

கரூர்: முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தின் முதல்வரும், தவெக தலைவருமான விஜய், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரசாரம் செய்து வந்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மாவட்டம் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்படித்தான் கரூருக்கு கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27-ந்தேதி விஜய் சென்றார். அங்குள்ள வேலுசாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இது போன்று ஒரு தலைவரை பார்க்க சென்று மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது இந்தியாவில் இதுதான் முதல் முறை என்பதால், மொத்த நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Vijay CBI Supreme court

இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை.. பாதுகாப்பு காரணமாக விஜய் நேரில் சென்று ஆறுதல் கூற இயலவில்லை என்று கூறப்பட்டது. அதன்பிறகு சில வாரங்கள் கழித்து, பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து தலா ரூ. 20 லட்சம் த.வெ.க. சார்பில் வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து கரூரில் சம்பவம் நடந்த இடம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜரானார். சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.. இதற்காக வருகிற 10-ந்தேதி முதல்வர், கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக இருக்கிறது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்.

அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆமானுல்லா கான், ஷெல் நாகு அடங்கிய அமர்வு முன்பு மூத்த வக்கீல் ஹுஸேபா அகமதி ஆஜராகி, கரூரில் தமிழக அரசின் சார்பில் வருகிற 10-ந்தேதி திட்டமிடப்பட்டு உள்ள நிகழ்வை குறிப்பிட்டு, சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
இந்த வழக்கின் முடிவை பொறுத்தே, கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குமா அல்லது இல்லையா என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+