அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு.. திமுகவின் மனு இன்று விசாரணை
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது. திமுக தனது மனுவில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகள், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
கரூர் மாநகரம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மிகக்குறுகிய இடத்தில் பல ஆயிரம் இருந்ததால், நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியான அஜய் ரஸ்தோகியின் நேரடியாக கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.கவில் கடந்த வாரம் இணைந்தனர்.
இந்த இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது. அதனை முடிக்காமல் விட மாட்டோம். கரூரில் கூட்ட நெரிசலை காவல்துறையை வைத்து உருவாக்கினார்கள். விஜய் மீதே கை வைத்தீர்களே, மக்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய திமுக, நேரடியாக உச்ச நீதிமன்றத்திலேயே ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக முறையிட்டுள்ளது.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக இருக்கிறது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்.
அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.














Click it and Unblock the Notifications