"இந்தியா" கூட்டணியை கை கழுவியதால்தான் 5 மாநில தேர்தலில் மண்ணை கவ்வியது காங்கிரஸ்..சாடுவது கி.வீரமணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்தியா" கூட்டணியை 5 மாநில தேர்தலில் பொருட்படுத்தாமல், ஒருங்கிணைக்காமல் காங்கிரஸ் தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு காரணம் என தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் தாய் அமைப்பான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி சாடியுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் 'இந்தியா' கூட்டணி என்ற அடிப்படையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கவில்லை. அது ஏதோ நாடாளுமன்றத்திற்கு மட்டும்தான் என்பதுபோல நடந்துகொண்டனர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி, அய்க்கிய ஜனதா தளம், இடதுசாரிகளும் தனித்தனியே போட்டியிட்டதன்மூலம் - வாக்குகள் பிரிந்ததன்மூலம் காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான காரணம் என்பதில் அய்யமில்லை. உளவியல் ரீதியாகவும் அது 'இந்தியா' கூட்டணிபற்றி முழுமையாக புரிந்துகொள்ளக்கூடிய பாடம் அனைத்துக் கட்சிகளும் புரிந்து செயல்படவேண்டும்!

DK Veeramani blames Congress for States Election Defeat

எடுத்துக்காட்டாக ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி. பெற்ற வாக்கு விழுக்காடு 41.69; காங்கிரஸ் பெற்றது 39.53. 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டு இருந்தால், 44.95 விழுக்காடு வாக்குகள் 'இந்தியா' கூட்டணிக்குக் கிடைத்திருக்கும். இது எதைக் காட்டுகிறது? 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடாகும். இலவசங்களைக் குறை கூறிய பிரதமர் மோடி - பி.ஜே.பி. நடந்து முடிந்த தேர்தலில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இலவசங்களை வாரி இறைத்தது ஏன்? அவையும் 'ஜூம்லா'தானா?

தெலுங்கானா வெற்றி: தெலங்கானா வெற்றி இந்த வகையில் காங்கிரசுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றுவிட்டதாலேயே மக்களவையிலும் தோல்வி ஏற்படும் என்ற விரக்தி - தப்புக் கணக்குப் போடத் தேவையில்லை; கடந்த காலங்களில் தலைகீழான தேர்தல் முடிவுகள் வந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். ஒன்றியத்திலும் சரி, மாநில அளவிலும் சரி ஆளும் பி.ஜே.பி. செய்த சாதனைகள் என்ன என்ற வினாவை மக்கள் மத்தியில் எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பயிற்சி எடுக்க வேண்டும்: ''ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தரப்படும் என்று சொன்ன ''மோடிஜி, உங்கள் வாக்குறுதி என்னாச்சு? ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும்'' என்று நீட்டி முழங்கிய மோடி ஜி - ஒரே ஒரு பைசா வங்கியில் போட்டதுண்டா?'' என்று எங்கு பார்த்தாலும் சுவரொட்டிகளும், சுவர் எழுத்துகளும் பளிச்சிட வேண்டும். எடுத்துக்காட்டுக்குத் தமிழ்நாட்டிலிருந்து இத்தகைய பிரச்சாரங்களின் பயிற்சி பெற வேண்டும். ரிசர்வ் வங்கிக்குக் கூடத் தெரியாமல் திடீரென்று ஒரு நாள் மாலை பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் மதிப்பிழப்பால் சிறு குறு தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டனவே - இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடுரோட்டுக்கு வரும் நிலைமையை ஏற்படுத்திய மோடி ஆட்சித் தொடரலாமா? உலகில் கச்சாப் பொருள்களின் விலை சரிந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதும், அதன் காரணமாக விலைவாசி உயர்ந்ததால் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் மக்களிடம் பி.ஜே.பி. ஆட்சியின் அவலத்தை எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கவேண்டும். இறுதியாக ஒன்று. தந்தை பெரியார் ஒன்றைச் சொல்வார், ''தோல்வியும் சில நேரங்களில் நன்மைக்கே!'' என்பதுதான் அது.

தோல்வி ஏன்?: நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தைத் துல்லியமாக அறிந்து, அந்தத் தவறுகள் இனி நேரா வண்ணம் திட்டங்களை முன்கூட்டியே வரையறுத்துக் களப் பணிகளைத் தொடரவேண்டும். அப்படி ஒன்றும் பிரதமர் மோடியின்மீது மக்களிடத்தில் நன்மதிப்புக் கிடையாது. அன்றாடம் வயிற்றைத் தடவிப் பார்க்கும் மக்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த உண்மை இது. எல்லா வகையிலும் தோல்வி கண்ட ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி! திட்டமிடுதல்தான் முக்கியம். எல்லா வகையிலும் தோல்வி கண்ட ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை - உரிய வகையில், திட்டமிட்ட முறையில் செயல்பட்டால், மக்கள் தூக்கி எறியத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

ராமர் கோவில்: ஒவ்வொரு நாளும் பொதுத் துறைகள் எல்லாம் தனியார்த் துறைக்குப் போய்க் கொண்டுள்ளன. அதானி, அம்பானி வகையறாக்களுக்கு வாராக் கடன் என்று 25 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்தது மோடி ஆட்சி. மோடி ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பவே மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிசேகம்! மக்களை அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் வாக்குறுதி!!
இவற்றையெல்லாம் எடுத்துக் கூறினால், பி.ஜே.பி. ஆட்சியின் தந்திரமும், ஏமாற்று வேலையும், திசை திருப்பும் யுக்தியும், புத்தியும் மக்களுக்குப் புரியத்தான் செய்யும்! மற்றொரு நடைபயணத்தை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி இளந்தலைவர் ராகுல் மேற்கொள்கிறார் - அது நல்லதோர் திருப்பத்தைக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை.

ஒற்றை குறிக்கோள்: மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது - பாசிசம் தான் சிம்மாசனத்தில் ஏறும் என்பதை மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கவேண்டும். கடைசியாக ஒன்று! 'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமைதான் இது - எத்தனை இடங்கள் எங்கள் கட்சிக்கு என்பதை விட்டுவிட்டு, வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மோடி ஆட்சி வராமல் தடுக்கப்படவேண்டியது என்ற ஒற்றைக் குறிக்கோளோடு ஒன்றுபட்டு, விட்டுக் கொடுக்கும் தன்மையோடு, நெளிவு சுழிவோடு 'இந்தியா' கூட்டணி செயல்படவேண்டும்! வெற்றி நமதே என்ற உறுதியோடு இன்று முதலே பயணத்தைத் தொடரவேண்டும்! தொடரவேண்டும்!! இவ்வறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+