கூட்டணியை சொல்லுங்க.. தொகுதி பங்கீட்டை பிறகு பேசலாம்.. பிரேமலதாவுக்கு பிரஷர் போடும் திமுக, அதிமுக!
சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வரும் சூழலில், கூட்டணியை இதுவரையிலும் உறுதி செய்யாதது விவாதமாகி இருக்கிறது. இரு பெரிய கட்சிகள் தரப்பிலும் கூட்டணியை உறுதி செய்யுங்கள் என்று கோரிய போதும், பிரேமலதா விஜயகாந்த் தொகுதிகள் எண்ணிக்கை முடிவானால் மட்டுமே இறுதி செய்வோம் என்று பிடிவாதமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்துவிட்டனர். அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து, தொகுதி பங்கீடு தொடர்பான முடிவும் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் தேமுதிக மட்டும் இதுவரை கூட்டணி நிலைப்பாட்டை வெளியிடவில்லை.

ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாநாட்டிலேயே தேமுதிக கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி இருந்தார். ஆனால் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், பிரேமலதா விஜயகாந்த் பேரத்தை அதிகரிக்க எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பிரேமலதா விஜயகாந்த் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்.
அதன்படி ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் என்பதே தேமுதிகவின் டிமாண்ட்டாக இருக்கிறது. ஆனால் திமுக தரப்பில் 8 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்பதே சாய்ஸாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக தரப்பில் ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு என்ற உறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக கூட்டணியை உறுதி செய்யுங்கள் என்று அதிமுக தரப்பில் பிரேமலதா விஜயகாந்த்க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்த முடிவு எடுத்தால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்வோம் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக கூறியுள்ளார். இதனால் அதிமுக சைலண்ட் மோடுக்கு சென்றிருக்கிறது.
திமுக தரப்பிலும் கப்சிப்பாகி இருக்கின்றனர். 2019 லோக்சபா தேர்தலின் போது ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனால் திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியுடன் தேமுதிக பேசி வந்தது. ஒரு கட்டத்தில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் நடக்கும் கட் அவுட்டில் விஜயகாந்த் புகைப்படம் இடம்பெற்றது.
ஆனாலும் தேமுதிக இறுதி முடிவை கூறவில்லை. தேமுதிக நிர்வாகி ஒருவர் துரைமுருகனுடன் கூட்டணி பேச சென்றது தேமுதிகவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. அப்போது திமுக தரப்பில் தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டது. வேறு வழியின்றி தேமுதிக 4 தொகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்டு 4லும் தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் அதேபோன்று தேமுதிக கூட்டணி முடிவை எடுப்பதில் தாமதப்படுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications