மாணிக்கம் தாக்கூரை.. திக்கி திணறடித்த விஜயகாந்த் மகன்.. கதை தெரியுமா? திமுகவின் சாட்டையடி மூவ்
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்பமாக தேமுதிக (DMDK) திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் விருதுநகரில் நடந்த 2024 மக்களவைத் தேர்தல் கவனம் பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் தமிழகமே உற்றுநோக்கிய தொகுதிகளில் ஒன்றாக விருதுநகர் உருவெடுத்தது. திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம் முழுவதும் பெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், விருதுநகரில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெற்றி வாய்ப்பு இரு தரப்பிற்கும் ஊசலாடிக் கொண்டே இருந்தது.
மிகக் குறுகிய வாக்கு வித்தியாசம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த வேட்பாளர் பி. மாணிக்கம் தாகூர், மூன்றாவது முறையாக இத்தொகுதியில் களம் கண்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் வி. விஜய பிரபாகரன் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை நாளில், காலை முதல் மாலை வரை இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் (36.28%) பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகள் (35.87%) பெற்றார். கடைசி இரண்டு ரவுண்டு வரை தேர்தல் முடிவு மேலும் கீழும் மாறும் வந்தது. இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 4,379 மட்டுமே. இது அந்தத் தேர்தலில் தமிழகத்திலேயே பதிவான மிகக் குறைந்த வெற்றி வித்தியாசமாகும்.

தேமுதிகவை மீட்டெடுத்த விஜய பிரபாகரன்
தேர்தலில் தோல்வியடைந்தாலும், விஜய பிரபாகரனின் செயல்பாடு அரசியல் நோக்கர்களை வியக்க வைத்தது. கடந்த சில தேர்தல்களாகத் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்து வந்த நிலையில், இந்தத் தேர்தல் அக்கட்சிக்கு ஒரு மறுமலர்ச்சியாக அமைந்தது. கிட்டத்தட்ட இந்த தேர்தலில் மாணிக்கம் தாக்கூரை விஜயபிரபாகர் திக்கி திணறடித்தார்.
தந்தையின் நிழல்: தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்தின் சாயல் மற்றும் அவரது எளிமை மக்களிடையே, குறிப்பாகப் பெண் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
வலுவான போட்டி: பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் 1,66,271 வாக்குகள் (15.66%) பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஒரு நட்சத்திர வேட்பாளரையும் மீறி, விஜய பிரபாகரன் காங்கிரஸுக்குச் சமமான வாக்குகளைப் பெற்றது அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.
கள நிலவரம்
விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் விஜய பிரபாகரனுக்குக் கூடுதல் ஆதரவு கிடைத்தது. குறிப்பாகத் திருமங்கலத்தில் அவர் சுமார் 10,000 வாக்குகள் முன்னிலை பெற்றார். இருப்பினும், சிவகாசி மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் மாணிக்கம் தாகூருக்குக் கைகொடுத்ததால் அவர் நூலிழையில் வெற்றி பெற்றார்.
விஜயபிராபகரன் கூட்டணி
தேமுதிகவின் வருகை திமுக கூட்டணிக்கு வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலங்களில் கூடுதல் பலத்தை சேர்க்கும்.
வட தமிழகம்: கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வன்னியர் அல்லாத பிற சமூக வாக்குகளையும், நடுநிலை வாக்குகளையும் தேமுதிக எளிதாக ஈர்க்கும். இது பாமகவின் செல்வாக்கைச் சமாளிக்க திமுகவிற்கு உதவும்.
கொங்கு மண்டலம்: சேலம், ஈரோடு பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே விஜயகாந்த் மீதான அபிமானம் இன்றும் தொடர்கிறது.
அனுதாப அலை: கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், அவர் மீதான "அனுதாப வாக்குகள்" (Sympathy Votes) ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications