திமுக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் திடீர் பாராட்டு! மாறி வீசும் கூட்டணிக் காற்று? அரசியல் ட்விஸ்ட்!
சென்னை: திமுக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவுடனும், பாஜகவுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத அரசியல் ட்விஸ்ட் ஒன்று இன்று அரங்கேறியுள்ளது. இதன் மூலம் கூட்டணிக் காற்று மாறி வீசக்கூடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக 4 மக்களவை ஒரு மாநிலங்களவை சீட் எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதிமுகவோ மாநிலங்களவை சீட்டுக்கு வாய்ப்பே இல்லை என கறார் காட்டிவிட்டதாகவும் இதனால் கடும் அப்செட்டில் இருந்த பிரேமலதா திடீர் திருப்பமாக திமுகவை பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் பாஜகவுடன் நெருக்கம் காட்டிய தேமுதிக ஒரு கட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் முடிவுப்படியே கூட்டணி என குண்டை போட்டது. அதன் அடிப்படையில் கடந்த 7ஆம் தேதி சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய பிரேமலதா யாருடன் கூட்டணி அமைக்கலாம் என விவாதித்தார். பெரும்பாலானோர் அதிமுக கூட்டணியில் இணையலாம் என மனதில் தோன்றியதை மறைக்காமல் கூறினர். அதேபோல் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிக வெற்றி பெறுவது கடினம் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் நோக்கருமான தராசு ஷியாமும் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தான் இன்று பிரேமலதா விஜயகாந்திடம் இருந்து இப்படியொரு பாராட்டு திமுகவுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு;
'' தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்துக்குள்ளாக, அப்போது அங்கு வந்த ரயிலை டார்ச் அடித்து, ஓட்டுனருக்கு எச்சரிக்கை செய்து நடக்க இருந்த பெரும் விபத்தைத் தடுத்த சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியின் வீரதீர செயலைப் பாராட்டி 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்க என்ற தேமுதிகவின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதற்கு எங்களுடைய பாராட்டுக்களை தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் தேமுதிக சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.''
திமுகவை பிரேமலதா பாராட்டி பதிவு வெளியிட்டிருப்பதன் மூலம் இனி அடுத்தடுத்த நகர்வுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள நிலையில் பிரேமலதாவிடம் இருந்து இப்படியொரு ஸ்டேட்மெண்ட் வந்திருப்பது தான். திமுக கூட்டணியில் தேமுதிக இணைய முன்வந்தால் 2 தொகுதிகள் ஒதுக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications