ஒரு உயிர் போச்சே... பள்ளி மாணவர்களுக்குள் சாதி பாகுபாடா? - விஜயகாந்த் வேதனை
சென்னை: சாதி பிரச்சனையில் பள்ளி மாணவனை சக மாணவர்களே தாக்கியதில் அவர் உயிரிழந்த செய்தி தனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் பள்ளி மாணவர்களிடையே சாதி பாகுபாடு உள்ளது வேதனையளிப்பதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடியில் சாதி கயிறு கட்டுவது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை அடிதடியாக மாறியது.
இதில் செல்வசூரியா என்ற மாணவர் தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மாணவர் உயிரிழப்புக்கு காரணமான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடலூர் பள்ளியில் சாதி மோதல்
இதேபோல், கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர் சாதியை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறி இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் T.புதுப்பாளையம், வண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வெளிநபர்கள் உள்ளே புகுந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

8 மாணவர்கள் காயம்
சாதி ரீதியாக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு புகுந்து வெளி நபர்கள் நடத்திய தாக்குதலில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி செல்லும் மாணவர்கள் இடையே சாதி ரீதியிலான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

விஜயகாந்த் கண்டனம்
இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பள்ளி பருவத்திலேயே சாதிக்காக சக மாணவனை தாக்கியது மிகவும் அபாயகரமானது. நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசுப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் இடையே கையில் சமுதாய ரீதியாக கயிறு கட்டுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களிடம் சாதி பாகுபாடா?
இதில் செல்வ சூர்யா என்ற மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தான் என்ற செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். பள்ளி மாணவர்களிடையே சாதி பாகுபாடு உள்ளது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. சாதிக்காக மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது.












Click it and Unblock the Notifications