DMDK+ DMK: முதல்முறையாக பழம் நழுவில் பாலில் விழுந்தது! திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7+1 டீல்?
சென்னை: திமுக கூட்டணியில் முதல் முறையாக தேமுதிக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 7 சட்டசபை தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழம் நழுவி பாலில் விழும் என 2016ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போது அது உண்மையாகியுள்ளது என்பதால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் (தேமுதிக) இன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார். இது தேமுதிக வரலாற்றில் திமுகவுடன் முதல்முறை அமையும் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக நீண்டகாலமாக அதிமுக உடனான கூட்டணிகளில் இருந்து வந்த நிலையில், இம்முறை திமுகவை தேர்ந்தெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகளின்படி, தேமுதிகவுக்கு 6 முதல் 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்றும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக கூட்டணி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக அமைத்த முந்தைய கூட்டணிகள்
- 2006 சட்டமன்றத் தேர்தல்: தனித்துப் போட்டி (முதல் தேர்தல், 1 சீட் வென்றது).
- 2011 சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணி - 41 தொகுதிகளில் போட்டி, 29 வெற்றி.
- 2014 மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணி - 14 தொகுதிகள், வெற்றி இல்லை.
- 2016 சட்டமன்றத் தேர்தல்: மக்கள் நலக் கூட்டணி (தனி அணி) - தேமுதிக, மதிமுக, விசிக உள்ளிட்டவை; வெற்றி குறைவு.
- 2019 மக்களவைத் தேர்தல்: அதிமுக கூட்டணி.
- 2021 சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணி - 10 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆனால் வெற்றி மிகக் குறைவு (எ.கா. 0-2).
- 2024 மக்களவைத் தேர்தல்: அதிமுக கூட்டணி (அதிமுக தோல்வி).
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் காலத்தில் அதிமுகவுடன் நெருக்கமாக இருந்தாலும், அவரது மறைவுக்குப் பின் பிரேமலதா தலைமையில் திமுகவுடன் இணைவது புதிய அத்தியாயம். இக்கூட்டணி திமுகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அதிமுக தரப்பில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக இதுவரை 14 தொகுதிகளை கேட்டு வந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 சட்டசபை தொகுதிகளையும் 1 ராஜ்யசபா சீட்டையும் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. இன்று திடீர் ட்விஸ்ட்டாக அண்ணா அறிவாலயத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் சென்றனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. இதை முதல்வர் ஸ்டாலினும் பிரேமலதா விஜயகாந்தும் உறுதி செய்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், "திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை உறுதி செய்கிறோம். எங்களுடைய கழகச் செயலாளர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் திமுகவுடன் கூட்டணி வைப்பதைத் தான் விரும்பினார்கள்.
கேப்டன் இல்லாத நேரத்தில் இந்தக் கூட்டணி அமைத்திருக்கிறது. 2016-ல் இந்தக் கூட்டணி அமைய வேண்டியது. கலைஞர் ஐயா பழம் நழுவி பாலில் விழப்போகிறது என்று சொன்னார்.
ஆனால் 10 வருடங்கள் கழித்து தாமதமாக இந்தக் கூட்டணி உறுதியாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். எத்தனை நம்பர், யார் வேட்பாளர்கள், எந்தத் தொகுதி என்பது எல்லாம் குழு அமைத்து இரண்டு கட்சிகளும் பேசி முடிவு எடுக்கும். அதனை அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications