விஜயகாந்தின் வலதுகரத்திற்கே சீட் இல்லையா.. தேமுதிகவில் புதிய பஞ்சாயத்து
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளிலும் வேட்பாளர் அறிவிப்பில் ஆங்காங்கே அதிருப்தியாகி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேமுதிகவில் விஜயகாந்தின் வலதுகரமாக வலம் வந்த பார்த்தசாரதிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன், திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி, பல்லாவரம் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் (தனி) தொகுதியில் கே.பி. பிரதாப் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேமுதிக வேட்பாளர் பட்டியல்
தருமபுரி தொகுதியில் இளங்கோவன், போளுர் தொகுதியில் டி.பி சரவணன், மயிலம் தொகுதியில் வெங்கடேசன், ஓமலூர் தொகுதியில் ஏ.ஆர். இளங்கோவன், சேலம் மேற்கு தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேமுதிக சார்பில் ஓதுக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சீட்டில் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் எம்பியாகிவிட்டார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லை என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 2 கட்சிகளுக்கு மட்டும் தான் திமுக கூட்டணியில் கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விஜயகாந்தின் வலதுகரத்திற்கு சீட் இல்லை
சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்தமுறை போட்டியிட்டதை விட குறைவான தொகுதிகள் தான் வழங்கப்பட்டன. இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூட்டணி கட்சி தலைவர்கள் கூறினார்கள். இந்தப் பிரச்சனையில் தான் தவாக திமுக கூட்டணியில் இருந்தே விலகியது. மறுபக்கம் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இது விமர்சனமானது.
ஆனால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியும் கூட தேமுதிகவில் முக்கிய நிர்வாகிகளுக்கே சீட் கிடைக்கவில்லை என்கிற பஞ்சாயத்து வெடித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தேமுதிகவின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதிக்கு தேமுதிகவில் சீட் கொடுக்கவில்லை. இவர் விஜயகாந்த் இருந்தபோது அவரின் வலதுகரமாக வலம் வந்தவர். கடந்த 2011 - 2016 காலகட்டத்தில் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாக பார்த்தசாரதி இருந்தார்.
சீட் மறுப்பு
விஜயகாந்த் மறைவுக்கு பிறகும் பார்த்தசாரதி தேமுதிகவின் முக்கிய இரண்டாம் கட்ட நிர்வாகியாகவே இருக்கிறார். கட்சியின் நிகழ்ச்சிகளில் முன்வரிசையில் உள்ளார். அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பது தேமுதிகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications