14 லோக்சபா சீட் + 1 ராஜ்யசபா எம்.பி பதவி தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி: அதிர வைத்த பிரேமலதா!
சென்னை: 14 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை எம்.பி பதவி தரும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைந்தார். அதற்கு முன்னதாக, தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை தேமுதிகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், தேமுதிக இரட்டை இலக்கங்களில் சீட் கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. எனினும், 4 லோக்சபா சீட் மற்றும் 1 ராஜ்யசபா சீட் எனும் தொகுதி பங்கீட்டு முடிவை நோக்கி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியானது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பிரேமலதா, "விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், திரை உலகினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்திற்கு அரசு மரியாதை அளித்த தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். மாவட்ட செயலாளர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடனும், மற்றொரு தரப்பினரோ அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி அமைக்கும்.
எனவே யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை கூட்டணி குறித்து யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை.
பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் கூட்டணி நிலைப்பாடு குறித்த தேமுதிகவின் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மக்களவைத் தேர்தலுக்காக இனிமேல்தான் குழு அமைக்க உள்ளோம். முந்தைய தேர்தல்களில் தேமுதிக தமது பலத்தை நிரூபித்தது போல இந்த தேர்தலிலும் நிரூபிக்கும்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications