கூட்டணி மட்டுமா? திமுக - அதிமுக கட்சிகளை ஒன்றாக இணைக்க நடந்த முயற்சி.. 1979ல் என்ன நடந்தது?
சென்னை: திமுக - அதிமுக கூட்டணி அமைக்கப்போவதாக தகவல் பரவினாலும் பரவியது, தமிழக அரசியல் களமே பரபரத்துக் கிடக்கிறது. இந்நிலையில், 1979ல் திமுக - அதிமுக இணைப்பு முயற்சி பிஜு பட்நாயக் முன்னெடுப்பில் முடிவானது பற்றி பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காமல் தத்தளித்து வரும் சூழலில் நேற்று இரவு முதல், அதிமுக - திமுக இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் விஜய் ஆட்சியமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனினும், அதிமுக தமது எம்.எல்.ஏக்களை புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைத்து பதற்றத்தைக் கூட்டி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், 10 ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏக்களை சென்னையில் இருக்குமாறு கூறியுள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 45 ஆண்டுகளுக்கு முன்பு திமுக - அதிமுக இணைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது பற்றிய விவாதம் எழுந்து வருகிறது.
மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சி 1979-ல் கவிழ்ந்ததும், சில வார காலம் பிரதமராக நீடித்த சரண்சிங் ஆட்சியும் இந்திரா காந்தி ஆதரவை வாபஸ் பெற்றதால் கவிழும் நிலையில் இருந்தது. அடுத்த பொதுத் தேர்தலுக்காக நாடு தயாராகி வந்தது. அப்போது ஜனதா ஆட்சியை தக்கவைக்க, அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அப்போதைய மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக் அதிமுக - திமுக இணைப்பு முயற்சியை மேற்கொண்டார்.
மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் இருந்த திராவிடக் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1979-ல் தனது நண்பரான கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்து பிஜு பட்நாயக் திமுக - அதிமுகவை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தையை நடத்தினார். எம்ஜிஆரையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது கருணாநிதி சில நிபந்தனைகளை முன்வைத்தார். இரண்டு கட்சிகளும் இணையும் பட்சத்தில் கட்சியின் பெயர் திமுக என்றே இருக்க வேண்டும். அதிமுக கொடியில் இடம்பெற்றிருக்கும் அண்ணாவின் படமே கட்சி கொடியில் பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது கொடி அதிமுக கொடியையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதல்வராக இருக்கும் எம்.ஜி.ஆரே முதல்வராகத் தொடரலாம். எங்களுக்கு எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் நாங்கள் அமைச்சர் பதவி எல்லாம் கேட்க மாட்டோம். எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட பொருளாதார இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். நான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும். மற்ற பதவிகள் குறித்து நாம் பிறகு முடிவு செய்துகொள்வோம் என்ற நிபந்தனைகளை கலைஞர் முன்வைத்துள்ளார்.
இந்த நிபந்தனைளைக் கேட்ட பிஜு பட்நாயக் கலைஞரையும், எம்.ஜி.ஆரையும் சந்திக்க வைக்க சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்தார். திமுக தரப்பில் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், அதிமுக தரப்பில் எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கலைஞரும் எம்.ஜி.ஆரும் சுமார் அரை மணி நேரம் கட்சியை இணைப்பது குறித்து தனியாகப் பேசினர்.
அதிமுக, திமுக கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை வெவ்வேறு இடங்களில் கூட்டி கட்சி இணைப்பு தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்ற முடிவை இருவரும் எடுத்தனர். எல்லாம் சுமுகமாக முடிந்தாலும் சந்திப்பிற்கு அடுத்த நாள் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர், திமுகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். கட்சி இணைப்பு பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. இதன் காரணமாக திமுக - அதிமுகவை இணைக்க வேண்டும் என்ற பிஜு பட்நாயக்கின் முன்னெடுப்புகள் தோல்வியில் முடிந்தது.
இந்த ரகசிய சந்திப்பு நடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய கருணாநிதி, "எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த ஒருவர்தான் இந்தத் திட்டத்தைக் கெடுத்தார். எம்.ஜி.ஆருடனான தனிப்பட்ட சந்திப்பு சுமுகமாக இருந்தது. சந்திப்புக்குப் பிறகு அவர் வேலூருக்குப் புறப்பட்டார். காரில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார்.













Click it and Unblock the Notifications