வேளாண் பட்ஜெட்டில் 'அவங்களுக்காக' எந்த அறிவிப்பும் இல்லையே.. ரொம்ப ஏமாற்றம்.. வேல்முருகன் வேதனை!
வேளான் பட்ஜெட் குறித்து திமுக கூட்டணி எம்.எல்.ஏ வேல்முருகன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சென்னை : "என்.எல்.சி நிர்வாகத்தால் வதைக்கப்படும் மக்களின் பாதுகாப்புக்காக வேளாண் பட்ஜெட்டில் ஏதாவது திட்டத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லாததது வருத்தம் அளிக்கிறது." என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனரும் பண்ருட்டி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், வேளாண் பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக கூட்டணி எம்.எல்.ஏவான வேல்முருகன், என்.எல்.சி நில கையகப்படுத்தலால் பாதிக்கப்படும் மாற்று விவசாய நிலம் தருவார்கள், அவர்களுக்கு நிரந்தர வேலை தருவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை எனக் கூறியுள்ளார்.

வேளாண் பட்ஜெட்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது விவசாயிகள் மற்றும் வேளாண்துறையின் மேம்பாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளில் தென்னை மரம் இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 வீதம் 15 லட்சம் தென்னை மரக் கன்றுகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதிய அறிவிப்புகள்
நாமக்கல், திருப்பூர், கோவை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலம் உருவாக்கப்படும். கேழ்வரகு, கம்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும். 50,000 ஏக்கரில் சிறுதானிய உற்பத்திக்கு மானியம் வழங்கப்படும். சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும். சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ. 82 கோடி ஒதுக்கீடு. சிறுதானிய திருவிழாக்கள் வரும் ஆண்டு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

பட்ஜெட் பற்றி வேல்முருகன்
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், பண்ருட்டி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் கூறுகையில், "75 லட்சம் மரக்கன்றுகள் நடுதல், நலிந்த மக்களுக்கு மின் இணைப்புகளை வழங்கி விவசாயத்தில் ஈடுபடச் செய்வது, சிறுதானியங்களுக்கென தனி இயக்ககம், மத்திய அரசுடன் இணைந்து ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குதல், பனைக்கென்று தனி இயக்கம், மிளகாய், வாழை, முந்திரி, முருங்கை உள்ளிட்டவற்றிற்கு தனி இயக்கம் என்று பல்வேறு பணப் பயிர்களுக்கான சாகுபடியை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்த்தோம்
விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடிய நல்ல திட்டங்களை அறிவித்துள்ளனர். அதை தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்கிறது. உற்பத்தி செய்யும் அனைத்து விளை பொருட்களுக்கும் நியாயமான விலை நிர்ணயம் வேண்டும் என்பதை வேளாண் துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும். அதேபோல, இந்த பணப்பயிர்கள் விளையும் நிலத்தை கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகம் விவசாய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த மக்களின் பாதுகாப்புக்காக வேளாண் பட்ஜெட்டில் ஏதாவது திட்டத்தை அறிவிப்பார்கள், என்று எதிர்பார்த்தோம்.

ஏமாற்றம்
மாற்று விவசாய நிலம் தருவார்கள். அவர்களுக்கு நிரந்தர வேலை தருவார்கள் என்ற எதிர்பார்த்தேன். அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லாததது வருத்தம் அளிக்கிறது. அந்தவகையில், பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான நியாயமான விலை நிர்ணயம் இல்லாததும், என்.எல்.சி பகுதி விவசாயிகளுக்கு மாற்று நிலம் தரும் அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications