ஆபரேசன் ப்ரூட்டஸ்.. உள்ளூரிலேயே உள்ளடி வேலை.. கடுகடுப்பில் திமுக-அதிமுக தலைமை..! பட்டியல் ரெடியாமே!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருக்கும் நிலையில் திமுக - அதிமுக என இரண்டு கட்சி தலைமைகளுமே குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் உள்குத்து வேலை பார்த்ததன் விளைவு தான் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்..
நாடாளுமன்ற தேர்தல் களமானது தற்போது தமிழகத்தில் சற்று ஓய்ந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள் சற்றே அயர்ந்து உள்ளனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் அறிவிப்பு, சூறாவளி சுற்றுப்பயணம் என ஒரு மாதத்திற்கும் மேலாக மிகத் தீவிரமாக பணியாற்றி வந்த அவர்கள் தற்போது தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் தான் அவர்களுக்கு தலைவலியும் சேர்ந்தே வந்திருக்கிறது.
உள்ளடி வேலைகள்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தவர்கள் அந்தந்த தொகுதிகளில் மாவட்ட செயலாளராக இருந்தவர்கள் என ஒரு சிலர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருந்தது, கொடுத்த வேலையை செய்யாதது, தலைமை கொடுத்த பணத்தை வாக்காளர்களுக்கு முறையாக பட்டுவாடா செய்யாதது என பல உள்ளடி வேலைகளை பார்த்திருப்பது தலைமைக்கு புகாராக அனுப்பப்பட்டு இருக்கிறது.
திமுக-அதிமுக தலைமை: மேலும் வாக்குப்பதிவு நாளன்று குறிப்பிட்ட சில கட்சி வேட்பாளர்களுக்கு தங்கள் கட்சி முக்கிய நிர்வாகிகளே ஆதரவாக நடந்து கொண்டதாக புகார்கள் தலைமைக்குப் பாய அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது அதிமுக திமுக என இரு தரப்பும் என்கின்றனர் விவரம் அறிந்த அரசியல் புள்ளிகள்,. அந்த வகையில் சென்னையைத் தவிர பல்வேறு மாவட்டங்களில் அதிமுக திமுக என இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பல இடங்களில் முறையாக செயல்படவில்லை என தெரிய வந்திருக்கிறது.
திருச்சி கருப்பையா: அந்த வகையில் திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய பகுதிகளில் அதிமுக பொறுப்பாளர்களும் மாவட்ட செயலாளர்களும் சரிவர இயங்கவில்லை என தலைமைக்கு புகார் சென்றிருக்கிறது. திருச்சியை பொறுத்தவரை அதிமுக சார்பாக கருப்பையா என்பவர் போட்டியிடுகிறார். வெளி உலகத்திற்கு இவர் தொழிலதிபர் என தெரிந்தாலும் உள்ளே சற்று ஆழமாக விசாரிக்கும் போது அவர் தமிழகத்தின் பிரபல மணல் வியாபாரியும், தொழில் அதிபருமான திண்டுக்கல் ரத்தனத்தின் அக்கா மகன் என்பதும் அவரது அண்ணன் கரிகாலனும் மணல் தொழிலில் கொடிகட்டி பறந்தவர் என்பது தெரிய வந்தது. கரிகாலன் திமுகவில் இருந்தாலும் தம்பி கருப்பையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
திமுக நிர்வாகிகள்: மேலும் திமுகவில் உள்ளூர் நிர்வாகிகளை கைக்குள் போட்டுக்கொண்டு கருப்பையாவுக்கு ஆதரவாக வேலை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட துரை வைகோ கடும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் துரை வைகோ உணர்ச்சிவசப்பட்டு பேசியது பல உள்ளூர் நிர்வாகிகளை செயல்பாடு காரணமாகத்தான் என்கின்றனர் எனவும், கண்ணீர் விடும் அளவுக்கு துரை வைகோவுக்கு என்ன நடந்தது என கேட்டபோதுதான் மேற்கண்ட விஷயங்கள் தெரியவந்தது.
திண்டுக்கல் அதிமுக: அடுத்ததாக முதன்முறையாக அதிமுகவுக்கு மக்கள் பிரதிநிதியை பெற்று தந்தது திண்டுக்கல் தான் ஆனால் கடந்த 2 தேர்தல்களாகவே திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. கடந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. தற்போதும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் திண்டுக்கல்லை சேர்ந்த இரு முன்னாள் அமைச்சர்கள் தான்.. நத்தம் விஸ்வநாதனும் திண்டுக்கல் சீனிவாசனும் எங்கே தாங்கள் வேட்பாளர்களை பரிந்துரை செய்தால் தாங்கள் செலவு செய்ய வேண்டி வரும் என அஞ்சியே கூட்டணிக் கட்சிக்கு தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் எந்த தரப்பிலிருந்து வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அவரை தோற்கடித்து விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே இருதரப்பும் தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி உள்ளது தற்போது தெரியவந்தது. மேலும் மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக சார்பில் குறிப்பிட்ட தொகை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டாலும் திண்டுக்கல் தொகுதியில் கடந்த பல தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணமே கொடுக்கவில்லை.. மேலும் தலைமை கொடுத்த பணத்தையும் உரிய முறையில் செலவு செய்யாமல் இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர் திண்டுக்கல் அதிமுக நிர்வாகிகள்.. மேலும் கடந்த தேர்தலில் பூத் செலவுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதனையும் 15,000 ரூபாயாக குறைத்து விட்டதாக குமுறுகின்றனர்.
நெல்லை தொகுதி: நெல்லை தொகுதியில் தற்போதைய சூழலில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஓரளவு வாக்காளர்களை நன்கு கவனித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக அதிமுக கூட்டணியிலிருந்து பெரிய அளவில் பணத்தை செலவு செய்யவில்லை.. இதற்கு பாஜகவின் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அதிமுகவில் இருந்த நிலையில் அவருடன் சில நிர்வாகிகள் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் கூட அதிமுக வேட்பாளருக்கு பெரிய அளவில் அவர்கள் ஆதரவு தரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படியாக நெல்லையில் அதிமுக திமுக என இருதரப்பினர் மீதும் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.
ராமநாதபுரம்: இதே போல ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளரும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. பொதுவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்குலத்தோர் செல்வாக்கு சற்றே அதிக இருப்பது வழக்கம் தான். அதன் காரணமாகத்தான் தேனியை தவிர்த்து இராமநாதபுரத்தில் சுயேட்சையாக களமிறங்கும் அளவுக்கு நம்பிக்கையாக இருந்தார் ஓபிஎஸ். அதனை மெய்யாக்கும் வகையிலே அதிமுகவில் இருந்த ஒரு சில நிர்வாகிகளும் திமுகவில் இருந்த ஒரு சில நிர்வாகிகளும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆதரவு திரட்டுவதிலும் பூத் ஏஜென்ட் நியமனத்திலும் அதிமுக திமுக நிர்வாகிகள் சிலரை நேரடியாக ஓபிஎஸ்சிக்கும் உதவியதாக கூறப்படுகிறது. இந்த புகார்களை எதிர்த்தரப்பினர் தலைமைக்கு அனுப்பிய நிலையில் அது குறித்த நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் பட்டியல்: இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த மக்களவைத் தேர்தலில் நன்றாக வேலை பார்த்தவர்கள், வேலை பார்க்காதவர்கள், எதிர்த்தரப்பினருடன் கைகோர்த்தவர்கள் என ஒரு பெரிய பட்டியலையே இரு தரப்பும் அதாவது அதிமுகவும் திமுக தலைமையும் தயார் செய்து வைத்திருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அந்த நபர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications