திமுகவை தொடங்கிய ஒரே ஆண்டில் சிறைக்குள் அண்ணா! பக்கத்து அறையில் பெரியார்!
சென்னை: 1949இல் திமுகவைத் தொடங்கிய பிறகு அண்ணாதுரைக்கும் பெரியார் ஈ.வெ.ராமசாமிக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நிலவிவந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஒரே சிறைச்சாலைக்குள் ராஜாஜி அரசு தள்ளி இருந்தது என்பது வரலாறு.
ராஜாஜி மற்றும் காமராஜ் ஆகிய இரண்டு மிகப் பெரிய தலைவர்களை மீறி திமுக தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்தது. 1962இல் 50 தொகுதிகளின் வெற்றி பெற்றதை காமராஜரால் நம்பவே முடியவில்லை. 1952இல் 'திமுகவை மூட்டைப் பூச்சியை நசுக்குவதைப்போல் நசுக்கிவிடுவேன்' என்று சூளுரை செய்தார் ராஜாஜி. அவருக்குப் பின் திரைப்படக் கலைஞர்களின் ஆதரவினால் வளர்ந்து வந்த திமுகவை 'கூத்தாடிகளின் கட்சி' என்று தாக்கினார் காமராஜ். அவர் திமுகவை மட்டும் எதிர்க்கவில்லை. சினிமாவையும் சினிமா நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவதை எதிர்த்தார்.

காங்கிரஸ் கட்சியில் நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களை ஆதரித்த ஒரே தலைவர் சத்தியமூர்த்தி மட்டும்தான். அவர்தான் பாடகி, மற்றும் நடிகை கே.பி.சுந்தராம்பாளை மேல் சபைக்கு நியமித்தார். தமிழ் சினிமாவில் இருந்து சட்டசபைக்குள் வந்த முதல் கலைஞர் கே.பி.எஸ்.தான்.
காமராஜ் விமர்சித்த 'கூத்தாடிகள் கட்சி'
சிவாஜி கணேசன் போன்ற முக்கியமான நடிகர்கள் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அவர் திரை நடிகர்களை இறுதிவரை ஊக்குவிக்கவே இல்லை. மாறாக, திமுக திரை நட்சத்திரங்களை தங்களின் கட்சியில் இணைத்தது. மேலும் அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்ற தலைவர்கள் நாடகங்களில் நேரடியாக அரிதாரம் பூசி நடித்து மக்களின் செல்வாக்கைப் பெற்றனர். அதனால் கட்சி வேகமாக வளர்ந்தது.
திமுக 17.07.1949இல் தொடங்கப்பட்ட போது அக்கட்சியை ஆதரிக்கும் அளவுக்கு ஊடக பலம் இல்லை. அந்தக் காலத்தில் வெளியான 'சுதேசமித்திரன்' போன்ற பெரும் பத்திரிகைகள் திமுகவைப் புறக்கணித்தன. அக்கட்சி தொடர்பான செய்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயங்கின.
ஆகவே, மக்களிடம் தங்களின் கொள்கையைப் புத்தகம் மற்றும் நாடகங்கள் மூலமாக திமுக கொண்டுசென்றது. கட்சியின் கொள்கையைத் துண்டுப் பிரசுரங்களாக வெளியிட்டது.
மேலும் கட்சியிலிருந்த இரண்டாம் கட்ட தலைவர்களான அன்பழகன், நெடுஞ்செழியன், மதியழகன், காஞ்சி மணிமொழியார், ஈ.வெ.கி.ச் சம்பத், மு.கருணாநிதி எனப் பலர் பத்திரிகைகளைச் சொந்தமாகத் தொடங்கினர். அண்ணாதுரையின் 'திராவிட நாடு' பத்திரிகையைக் கடந்து 'போர்வாள்', 'மன்றம்', முரசொலி', 'கிளர்ச்சி' என 50க்கும் மேலான பத்திரிகைகளை திமுக நடத்தியது.
நாடகங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் திமுகவின் கருத்துகளைப் பரப்புவதைக் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. திமுக தொடங்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக முதல் மாநாடு சிவகங்கையில் (30.09.1950 -01.10.50) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதையொட்டி விழாக் கோலம் பூண்டது திமுக.
இந்த ஓராண்டுக்குள் தங்கள் கழகத் தொண்டர்களின் படைப்புகள் எந்தளவுக்கு சட்டரீதியாக முடக்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றி அண்ணாதுரை அவரது 'திராவிட நாடு' (24.09.1950) இதழில் பட்டியல் போட்டு காங்கிரஸ் ஆட்சியின் முகத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
திமுக தலைவர்கள் மீது பாய்ந்த வழக்குகள்
153 ஏ சட்டப் பிரிவினைக் காட்டி திமுக தலைவர்கள் எழுதிய புத்தகங்கள் மீது 'வெறுப்பு பிரச்சாரம்' செய்ததாகப் பல வழக்குகள் பதியப்பட்டன. அண்ணாதுரையின் பேச்சை வெளியிட்டதற்காக 'மெர்கண்டைல் பிரஸ்' மீது வழக்குப் பாய்ந்தது. வழக்கிலிருந்து வெளியே வர 1000 ரூபாய் ஜாமீன் விதிக்கப்பட்டது. அண்ணாதுரை எழுதிய 'விடுதலைப் போர்' புத்தகத்தை வெளியிட்ட 'திராவிடப் பண்ணை' பதிப்பாளர் மீது வழக்குப் பாய்ந்தது.
அண்ணாதுரையின் 'இலட்சிய வரலாறு' மீது பதியப்பட்ட வழக்கு முறியடிக்கப்பட்டது.
நூலில் துவேஷக் கருத்துகள் இல்லை எனத் தீர்ப்பு கிடைத்தது. ஆனால், திராவிடர் கழகத்திலிருந்த காலத்தில் அண்ணா எழுதிய 'ஆரிய மாயை' நூலுக்கு எதிரான வழக்கில் ஆசிரியருக்கு 6 மாதம் சிறைத் தண்டனைக் கிடைத்தது. அதற்காக அண்ணா சிறையில் அடைக்கப்பட்டார். 1949 செப்டம்பர் 17 அன்று திமுகவைத் தோற்றுவித்தார் அண்ணா. சரியாக ஒரு ஆண்டு நிறைவு பெற்ற போது 1950 செப்டம்பர் 18 அன்று அண்ணாதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதிய 'காந்தியார் சாந்தியடைய' புத்தகம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. நூலாசிரியருக்கு 6 மாதம் சிறைவாசமும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. து.வீ. நாராயணன் எழுதிய 'அழியட்டுமே திராவிடம்' மீது 153ஏ சட்டப் பிரிவு பதியப்பட்டது. வழக்குப் பதிந்தபோது அதன் ஆசிரியர் மறைந்துவிட்டார். அதனால் அதைப் பிரசுரம் செய்த துறையூர் தங்கவேல் மீது வழக்குப் பாய்ந்தது. இவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும் 500 ரூபாய் கட்டும்படி தீர்ப்பு உரைக்கப்பட்டது.
அண்ணாதுரையின் கைதி எண்
திமுக ஆதரவு பத்திரிகையான 'கிளர்ச்சி' மீதும் 'உடுமலை பீரங்கி' ஆசிரியர் பி.ரங்கநாதன் மீதும் மத துவேஷத்தை தூண்டியதாக வழக்குத் தொடர்ந்தது அரசு. வழக்கை உடைத்து திமுகவினர் வெற்றி கண்டனர். மேற்கொண்டு எம்.எஸ்.சிவசாமியின் 'சவுக்கடி'யும் வழக்கை எதிர்கொண்டது. அது தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் 'Clerical Mistake' எனக் கூறி மீண்டும் வழக்கு மறு உயிர் கொடுக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் ஈ.வெ.ராமசாமியின் 'பொன்மொழிகள்' மீதான வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக அண்ணாதுரை நடத்திய 'திராவிட நாடு' பத்திரிகைக்கு எதிராக அன்றை ஆட்சியாளர் ராஜாஜியின் அரசு வழக்குப் போட்டது. அதை உடைத்து திமுக தரப்பு. 'ஆளவந்தான்' அரசைக் கண்டித்து அண்ணாதுரையின் தம்பிகள் தங்களின் ஏடுகளில் பக்கம் பக்கமாக எழுதி குவித்தனர்.
சென்னையில் 25.10.1950 அன்று சென்னையில் ராஜகோபாலாச்சாரிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டத் தராயாக இருக்கும் படி 'திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஒரே ஆண்டில் 500க்கும் மேற்பட்ட கிளைக் கழகங்களை திமுக உண்டாக்கியது. 7 மாவட்ட மாநாடுகளை நடத்தி இருந்தது கழகம். 1859இல் கோயில்பட்டியில் கூடிய செயற்குழுவில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் போட 10 நாட்களில் சென்னை வந்த மத்திய வானொலி இலக்கா மந்திரி திவாகருக்கு எதிராகச் சென்னையில் செப்டமர் 13 ஆம் தேதி கறுப்புக் கொண்டி ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. ராஜாஜி ஆட்சியில் கைதான அண்ணாதுரையும் ஈ.வெ.ரா.வும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அண்ணாவுக்கு 12 ஆம் நெம்பர் பெரியாருக்கு 13 ஆம் நெம்பரும் வழங்கப்பட்டன. தி.க.விலிருந்து பிரிந்த பின்னர் இந்த இரு தலைவர்களும் எதிரும் புதிருமாகச் செயல்பட்டனர். காலம் இந்த இருவரையும் ஒரே சிறைக்குள் அடைத்திருந்தது.
-
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்!












Click it and Unblock the Notifications