துரோகிகள்.. தென்னிந்தியா முதுகில் குத்திய தலைவர்கள் யார் யார்? லிஸ்ட் போட்டு அடிக்கும் திமுக!
சென்னை: மத்திய பாஜக அரசு நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா (தொகுதி மறுவரையறை தொடர்பான தொகுப்பு) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. 528 எம்பிக்கள் பங்கேற்ற வாக்கெடுப்பில், அரசுக்குத் தேவையான 352 வாக்குகளுக்குப் பதில் 298 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பின்னடைவைத் தொடர்ந்து, "தெற்கின் குரலை நசுக்க நினைத்த பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது" எனக் கொண்டாடி வரும் திமுக ஐடி விங், அதே சமயம் இந்த ஆபத்தான மசோதாவிற்குத் துணை நின்ற அல்லது மென்மையான போக்கைக் கடைப்பிடித்த தென்னிந்தியத் தலைவர்களை "துரோகிகள்" எனப் பட்டியலிட்டு விமர்சித்து வருகிறது.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக):
தமிழகத்தின் நலனை அடகு வைத்து, இந்த மசோதா தோல்வியடையும் வரை மௌனம் காத்ததாக இவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.முக்கியமாக இந்த மசோதா குறித்து அவர் பேசுகையில், இதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. தொகுதி மறுவரையறை பாதிக்காது என தெளிவாக கூறியும் ஸ்டாலின் டபுள் கேம் ஆடுகிறார். பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை தடுக்க முயற்சிக்கிறார். தொகுதி மறுவரையறையை கண்டித்து தமிழகத்தில் கருப்புக் கொடி போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். ஆனால் நான் எங்கும் கருப்புக் கொடியை பார்க்கவில்லை.
ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம் வந்துவிட்டது. அதிமுகவை பற்றி பேச முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு என்ன தகுதி இருக்கிறது, நிதி அமைச்சராக இருந்த அவர் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார். திமுக கூட்டணியின் 39 எம்பிக்களும் பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து என்ன கொண்டு வந்தார். எல்லாம் பில்டப், கபட நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து அட்டாக் செய்து வருகிறது.
#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 18, 2026
புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!#வெல்வோம்_ஒன்றாக! https://t.co/h3WeTFv5ON pic.twitter.com/OyxQmotm4a
சந்திரபாபு நாயுடு (TDP): ஆந்திராவின் எம்பி இடங்கள் குறையும் அபாயம் தெரிந்தும், பாஜகவுடனான கூட்டணி உறவுக்காக மசோதாவிற்கு எதிராகப் பேசத் தயங்கியதாகச் சாடப்படுகிறார். முக்கியமாக கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக இவர் தென்னிந்தியாவை அடகு வைக்க துணிந்துவிட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
பவன் கல்யாண் (ஜனசேனா): தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியை "தேசிய வளர்ச்சி" என நியாயப்படுத்தியதற்காக இவரைத் திமுக ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றனர். நடிகர் அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் என்று திமுக ஆதரவு நெட்டிசன்கள் விமர்சனங்களை வைக்கின்றன.
ஜெகன் மோகன் ரெட்டி (YSRCP): மத்திய அரசுடன் மறைமுக இணக்கம் காட்டி, தென்னிந்திய மாநிலங்களின் ஒருமித்த எதிர்ப்பைக் குலைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்.
இந்த மசோதா தோல்வியடைந்ததை அடுத்து, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த தொகுதி மறுவரையறை மசோதா 2026-ஐ மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. "மக்கள்தொகையைச் சரியாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்னிந்தியாவைத் தண்டிக்கும் முயற்சியை இந்தியா கூட்டணி தடுத்து நிறுத்தியுள்ளது" என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தத் திட்டத்தை ஆதரித்த தென்னிந்தியத் தலைவர்களை மக்கள் மறக்கக் கூடாது என்ற நோக்கில், திமுக ஐடி விங் சமூக வலைதளங்களில் தொடர் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
