அலப்பற கெளப்புறோம்.. புழல் ஜெயில் ஏரியாவையே அலற விடும் திமுகவினர்! செந்தில் பாலாஜிக்காக வெயிட்டிங்!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் மத்திய சிறைக்கு முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து, பிணை உத்தரவாதங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதனை நீதிமன்றம் ஏற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வர இருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 471 நாட்களாக சிறையில் இருந்து வந்தார். ஜாமீன் கோரி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்து வந்தன. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் நடைபெற்றது. அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வழக்குப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு. செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொடுத்து, 2 நபர்கள் ரூபாய் 25 லட்சத்துக்கான ஜாமீன் அளிப்பார்கள். அதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும்.
இன்று காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற ஜாமீன் தீர்ப்பை சுட்டிக்காட்டினார். அதற்கு , உச்சநீதிமன்ற ஜாமீன் நகல் இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நகல் கிடைக்கப்பெற்ற நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு நபர் பிணை உத்தரவாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற காவல் நிறுத்திவைக்கப்பட்டு, சிறைக்கு ஜாமீன் உத்தரவு நகல் அனுப்பப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் சற்று நேரத்தில் வெளியே வர இருக்கிறார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் மத்திய சிறைக்கு முன் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான திமுகவினர் உட்பட திமுக தொண்டர்கள் ஏராளமானோர் புழல் மத்திய சிறை முன்பு திரண்டுள்ளனர். பேண்ட் வாத்தியம் முழங்கி, திமுக கொடிகளுடன் அவர்கள் செந்தில் பாலாஜியை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.
சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வெளியே வர இருக்கும் நிலையில் திமுகவினர் புழல் மத்திய சிறை முன்பு குவிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருவதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications