விக்கிரவாண்டி: 'கள்ளச்சாராய சாவுகள்’ சவாலை மீறி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திமுக அன்னியூர் சிவா!
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி தேர்தல் நடைபெற்ற நிலையில் அருகே உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 66 பேரை பலி கொண்ட கள்ளச் சாராய சாவுகள் திமுகவுக்கு சவாலாக இருக்கும்; நெருக்கடியைத் தரும் என கூறப்பட்டது. ஆனால் இந்த கள்ளச்சாராய சாவுகள் நெருக்கடியை தாண்டி பிரம்மாண்ட வெற்றியை அறுவடை செய்துள்ளார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா.
2011-ம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டது. 2011-ல் சிபிஎம் கட்சி வென்றது. 2016-ல் திமுக வென்றது. ஆனால் 2016-ல் வென்ற திமுக எம்.எல்.ஏ. ராதாமணி காலமானார். இதனால் 2019-ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு முதல் இடைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வம் வெற்றி பெற்றார். 2021-ல் நடைபெற்ற தேர்தலில் திமுகவின் நா.புகழேந்தி வென்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி காலமானார். இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு 2-வது இடைத் தேர்தல் கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார்.

தற்போதைய விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்டது. லோக்சபா தேர்தலில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் திமுக அணியில் இடம் பெற்றிருந்த விசிக வேட்பாளர் ரவிக்குமார் 72,188 வாக்குகளைப் பெற்றார். அதிமுக 65,365 வாக்குகளைப் பெற்றிருந்தது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு 32,198 வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு 8,352-ம் கிடைத்தன.
ஆனால் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்துவிட்டது. இதனால் அதிமுக வாக்குகளை பெறுவதற்கு பாமக பகீர முயற்சிகளை மேற்கொண்டது. அதேபோல நாம் தமிழர் கட்சியும் இதே யுக்தியை கடைபிடித்தது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இத்தொகுதியை ஒட்டிய கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்தன. 66 பேரை பலி கொண்ட கள்ளச்சாராய சாவுகள் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் இன்றைய விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளோ திமுகவுக்கே மிகப் பிரமமண்டமான வெற்றியை கொடுத்திருக்கிறது. கள்ளச்சாராய சாவுகள் திமுகவுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் எந்த ஒரு நெருக்கடியையும் தரவில்லை என்பதையே இந்த முடிவுகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications