எல்லா அப்பாவுக்கும் பையனை வைச்சு படம் எடுக்க முடியாது.. விஜய்யின் நீட் கருத்து.. வலுக்கும் கண்டனம்
சென்னை: கல்வி விருது விழாவில் மாணவர்களிடம், நீட் மட்டும் தான் உலகமா என்று பேசிய தவெக விஜய்யின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பத்தினரும் விஜய்யின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஒவ்வொரு வருடமும்10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி வருகிறார். தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி மாமல்லபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், "நீட் தேர்வு மட்டும் தான் உலகமா. நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெரிது. அதுல நீங்க சாதிக்க நிறைய இருக்கு. குறிப்பிட்ட ஒரு பாடத்துல மட்டும் அதிக மதிப்பெண் எடுத்து சாதிக்கணும்னு நீங்க எந்த அழுத்தத்தையும் ஏத்திக்க வேண்டாம்." என்று கூறியிருந்தார்.
விஜய்யின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக சர்ச்சையாகியுள்ளது. அவரின் கருத்தை ஒரு சிலர் ஆதரித்தாலும், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மாணவர்களின் உரிமை பறிக்கப்படும் நிலையில், விஜய்யின் இந்த கருத்து பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது என்று திமுக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தன் எக்ஸ் கணக்கில், "உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை. நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல... நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது." என்று கூறியுள்ளார்.
திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தன்னுடைய எக்ஸ் தளத்தில்," இது ஊக்கம் அல்ல. ஆதிக்க சக்திகளின் தாக்கம். நீட் தான் உலகமா என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் குரல். அதையே தான் விஜய் பிரதிபலிக்கிறார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது ஒடுக்கப்பட்டோரின் கனவு, அதை just like that கடந்து செல்ல சொல்வது கொடுமை.என்ன செய்வது எல்லோருடைய தந்தைமார்களாலும், அவர்களின் பிள்ளையை வைத்து படம் எடுக்க முடியாது. கல்வியை மட்டுமே கொடுக்க இயலும்." என்று கூறியுள்ளார்.
Joe என்கிற எக்ஸ் தள கணக்கில், "முதலில் நீட் மட்டும்தான் உலகமான்னு கேட்பாங்க. அடுத்து இன்ஜினியரிங் மட்டும்தான் படிப்பான்னு சொல்வாங்க. கடைசில படிப்பு மட்டும்தான் வாழ்க்கையான்னு முடிப்பாங்க. கல்விங்குறது இங்க எல்லாருக்கும் சமமா கிடைக்க வேண்டிய விஷயம். அதுல தடை வந்தா போராடி அதை மீட்டுத்தர்றதுதான் தலைவர்களோட வேலையே தவிர வேற சாய்ஸ் இருக்குன்னு சொல்றது இல்லை." என்று கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்காக தற்கொலை செய்த அரியலூர் மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தன்னுடைய எக்ஸ் தளத்தில், "நீட் மட்டும்தான் உலகமா. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையா என்று நடிகர் விஜய் மாதிரியான உச்சபட்ச நடிகர்களின் குழந்தைகளிடம் வேண்டுமானால் கேட்கலாம். சினிமாத்துறையில் இருந்த தன் அப்பாவால், நடிகர் ஆன விஜய், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தன் மகனை இயக்குநராக்கி விட முடியும்.
மூட்டைத் தூக்கும் அனிதாக்களின் தந்தைகள், எப்படியாவது படிச்சி நல்ல வேலைக்கு போயிடுமா? என்றுதான் சொல்வார்கள். அனிதாக்கள் மருத்துவம் படிப்பதை "தீட்"டு என்கிறது "நீட்", நீங்கள் நீட்தேர்வை எதிர்ப்பதை விடுத்து, மருத்துவத்தை விட்டு நம் குழந்தைகளை தள்ளி நிற்கச் செய்யும்."என்று கூறியுள்ளார். திமுக ஆதரவாளரும், யூட்யூபருமான செந்தில் வேல், "நீங்கள் அரசியல் கட்சியே தான் ஆரம்பிக்கணுமா. ஏன் அரிசிக்கடை எல்லாம் வைக்கக் கூடாதா." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications