வேட்பாளர்கள் தேர்வில் திமுக மும்முரம்! அந்த 3 விஷயங்களின் அடிப்படையில் நேர்காணல்கள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கியுள்ள திமுக, அதில் மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு பெயர்களை இறுதி செய்கிறதாம்.
பணபலம், மக்கள் செல்வாக்கு, கட்சிக்கு விசுவாசம் ஆகிய மூன்றின் அடிப்படையிலேயே திமுகவில் வேட்பாளர்கள் டிக் அடிக்கப்படுகிறார்களாம்.
இதேபோல் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு இந்த முறை சீட் கொடுக்கக் கூடாது என்பது தலைமையின் முடிவு எனத் தெரிவிக்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
கொரோனா பரவல், ஒமிக்ரான் தொற்று அச்சுறுதலுக்கு மத்தியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாலும், 5 மாநில சட்டமன்றத் தேர்தலை தலைமை தேர்தல் ஆணையமே தள்ளிவைக்காமல் நடத்த முன் வந்திருப்பதாலும் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

பொங்கலுக்கு பிறகு
பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு எப்போது வேண்டுமானாலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தான் திமுக தரப்பில் இப்போதே கவுன்சிலர், நகராட்சி சேர்மன், மேயர், பதவியிடங்களுக்கான வேட்பாளர் நேர்காணலை மாவட்டச் செயலாளர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் அந்த நேர்காணல்கள் வழக்கம் போல் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்படுவதோடு போட்டியிட விரும்புபவர்களின் உள்ளூர் செல்வாக்கு, கட்சி மீதுள்ள விசுவாசம் ஆகியவைகளும் ஆராயப்படுகிறது.

கிரிமினல் வழக்கு
இதனிடையே பல மாவட்டங்களில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் விருப்பமனு கொடுத்திருப்பதாக புகார் எழுந்துள்ள சூழலில், அவர்களின் ஹிஸ்டரி ஆராயப்படுகிறதாம். கட்சிக்கு விசுவாசமாகவும், உள்ளூரில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராகவும் இருந்தால் அந்த நபருக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேர்வுப்படலங்கள் நடக்கிறதாம். காரணம், தேர்தல் செலவுகளை கூட மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மூலம் கவனித்துக்கொள்ளலாம் என்பது தானாம்.

தலைமை அறிவிக்கும்
வழக்கமாக உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை மாவட்டச் செயலாளர்களே அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் இந்த முறை 21 மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமை வெளியிடக்கூடும் எனக் கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட வேட்பாளர் பட்டியலை கிராஸ் செக் செய்யவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications