காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா உறுதி.. எங்கள் தேவையை சொல்லியுள்ளோம்.. செல்வப்பெருந்தகை பேட்டி!
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு தேவையான தொகுதிகளை திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவிடம் கொடுத்துள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டதாக தெரிவித்த செல்வப்பெருந்தகை, தவெகவுடன் காங்கிரஸ் கட்சி பேசுகிறது என்பது வதந்தி என்றும் கூறியுள்ளார்.
திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் சுமார் ஒரு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி குறைப்பது தொடர்பாக திமுக எதுவும் பேசவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார். திமுக உடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக, நம்பிக்கையுடன் சென்று கொண்டிருக்கிறது.
திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி கொள்கை கூட்டணி. இது தமிழ்நாட்டை காக்கும் கூட்டணி.. மதநல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை விரட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக காங்கிரஸ் கட்சியின் எந்த நிர்வாகியும் சொல்லவில்லை. ஒரு அரசியல் கட்சி என்றால், அனைவரும் பேசுவார்கள் என்றுதான் கூறினார்.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் திமுகவுடன் மட்டுமே பேசுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர். கிரிஷ் சோடங்கர் சொல்லாததை எல்லாம் செய்தியாக போடாதீர்கள். கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும், தொகுதி பங்கீடு தொடர்பாக நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிரிஷ் சோடங்கர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications