டெல்லிக்கு பறந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்.. திமுக கூட்டணியில் பிளவா? ஓபனாக சொன்ன ஆர்எஸ் பாரதி
சென்னை: தேர்தல் வந்தால், காங்கிரஸ் கட்சி இது போன்று பேசுவது வாடிக்கை தான் எனவும், இதையெல்லாம் பெருசா எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.. திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என திமுக செய்தித் தொடர்பாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்கும் என வெளிப்படையாக அறிவித்து இருந்தாலும் ஆட்சியில் பங்கு, 40 தொகுதிகள் என டிமாண்ட் வைப்பதும், தவெகவுக்கு ஆதரவாக சில பேசி வருவதாலும் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த சூழலில் காங்கிரஸ் நிர்வா
தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, 40 தொகுதிகள் என அகல கை விரிப்பதால், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழுவை திமுக இன்னும் அமைக்கவில்லை.

திமுக காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தைக்குழு அமைத்து காத்திருக்கும் நிலையில், திமுக எந்த முன்னெடுப்பும் மெற்கொள்ளாமல் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் தவெகவிற்கு ஆதரவாக பேசி வருவதும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பொதுவெளியில் பேசி வருவதையும் திமுக தலைமை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்ததும் தொடர்ந்து தவெக பற்றி பேசி வருவதும் காங்கிரஸ் மேலிடம் திட்டம் என்ன? தவக பக்கம் போகவே கட்சியின் தலைமை விரும்புகிறதா? அல்லது பேர வலிமையை அதிகப்படுத்த இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுகிறதா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்து வருகிறது.
காங்கிரஸ் இப்படி பேசுவது வாடிக்கைதான்
இத்தகைய பரபரப்பான சூழலில்தான் டெல்லியில் செவ்வாய்க்கிழமை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சூழலில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி அளித்த பேட்டி ஒன்றில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் போக்கு உள்ளதா? என்பது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். ஆர்.எஸ் பாரதி கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு இதுபோன்று பேசுவது வாடிக்கைதான். இதையெல்லாம் பெருசா எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. இது புதுசு இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் இப்படி வரும். அதை நாங்கள் சமாளித்துக்கொள்வோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.
ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ
முதல்வர் ஸ்டாலினை மூத்த சகோதரர் என்று ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். 2 சகோதரர்கள் எடுக்கும் முடிவுதான். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டுவார்கள். பிரவீன் சக்கரவர்த்தி ராகுல் காந்தியின் பிரதிநிதி என்று அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லையே..
காங்கிரசை பொறுத்தவரை ராகுல் காந்தி வாயில் இருந்து என்ன வார்த்தை வருகிறதோ அதைத்தான் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொண்டு நாங்கள் செயல்படுவோம். மற்றவர் சொல்வதை எல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டோம்" என்றார்.
ராஜகண்ணப்பன் கடும் விமர்சனம்
இதற்கிடையே திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜக்கண்ணப்பன் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியில் ஒருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார். 1967 க்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் வர முடிந்ததா? திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும்.
நேற்று கூட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் நானும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தோம். என்ன செய்வது... கூட்டணியில் இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம். தனியாக நிற்க வேண்டும் என்றாலும் ரெடி" என்று பேசினார். அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications