ஆட்சியில் பங்கு.. ராகுல் - ஸ்டாலின் முடிவு எடுப்பாங்க.. ஐ பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
சென்னை: கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று கூறியிருந்த நிலையில் இதற்கு இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ. பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து.
ஆட்சியில் பங்கு உண்டா இல்லையா என்பது குறித்து இந்தியா கூட்டணியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியும், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முதல்வர் ஸ்டாலின் கலந்து ஆலோசித்தே முடிவு செய்வார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:- ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அவர் அவரது கருத்தினை கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு உண்டா? இல்லையா என்பது குறித்து கட்சியின் தலைவர்கள் பேசி முடிவு சொல்வார்கள்.. எனவே அவரது கருத்து தனிப்பட்ட கருத்தாக தான் பார்க்கின்றோம்.
இந்தியா கூட்டணியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியும், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முதல்வர் ஸ்டாலினும் கலந்து ஆலோசித்த பிறகு தான் முடிவு செய்வார்கள்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழகத்தில் எப்போதும் காங்கிரஸ் ஆட்சி என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, ”இப்போது தமிழகத்தில் நடப்பதும் காங்கிரஸ் ஆட்சி தான்” என்று பதில் அளித்தார்.
முன்னதாக நேற்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த ஐ பெரியசாமி கூறுகையில், "ஆட்சியில் பங்கு என்பது அவர்கள் கேட்கும் உரிமை. கேட்பது அவர்கள் உரிமை.. ஆனால் தமிழகத்தில் எப்போதுமே இங்கு கூட்டணி ஆட்சி கிடையாது. தனிப்பட்ட கட்சியுனுடைய ஆட்சி தான். கூட்டணி ஆட்சி எல்லாம் இருக்காது. இதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications