கொண்டாட “ரெடியாகும்” உடன்பிறப்புகள்! மார்ச் 22ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஏன் தெரியுமா?
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது
சென்னை: வரும் மார்ச் 22 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமையகம் அறிவித்து இருக்கிறது. இதில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் மார்ச் 21 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டமும், மார்ச் 22 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

திமுக மூத்த நிர்வாகிகள்
அதே போல் துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திமுகவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

கருணாநிதி நூற்றாண்டு விழா
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. கடந்த 2022 ஜூன் மாதம் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

99 வது பிறந்தநாள்
இந்த நிலையில் அவரது 99 வது பிறந்தநாளுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அதை நூற்றாண்டு தொடக்க விழாவாக கொண்டாட திமுக தலைமை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி அதற்கான முன் ஏற்பாடு பணிகள், யோசனைகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசிக்க இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின் அரசியல்
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு பிறகு பள்ளி படிக்கும் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம் கொண்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிட, சமூக நீதி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். இவர் கொண்டு வந்த தொலைநோக்கு திட்டங்களால்தான் இன்று தமிழ்நாடு பல மாநிலங்களை காட்டிலும் முன்னேறி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் அறிஞர்கள்.












Click it and Unblock the Notifications