திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள்! மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்!
திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுத்த ஸ்டாலின்.
சென்னை: திமுகவில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு புதிய அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
"உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற தலைப்பில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த புதிய டார்கெட்டை கொடுத்திருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அறிவாயலத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு;

1 கோடி உறுப்பினர்கள்
''கலைஞர் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த கழகத்தை மேலும் வலிமைபடுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது.''

புதிய டாஸ்க்
''துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களைச் கழகத்தில் இணைத்திடுவோம்.'' இவ்வாறு அந்த தீர்மானம் அமைந்துள்ளது. இதனிடையே இந்த புதிய டாஸ்கை யார் யார் எந்தளவுக்கு நிறைவேற்றுகிறார்கள், எத்தனை பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க உள்ளார்கள் என்பதை திமுக தலைமை தீவிரமாக கவனிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்யமான போட்டி
திமுக மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் ஸ்டாலின் நடத்தும் ஆரோக்யமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த டாஸ்கிலும் அமைச்சர் செந்தில்பாலாஜியே நம்பர் 1 இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் ஏற்கனவே கரூர் மற்றும் கோவை மாவட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது கவனிக்கத்தக்கது.

2 கோடி பேர்
தற்போது 1 கோடி பேர் திமுகவில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் மேலும் 1 கோடி பேரை புதிதாக சேர்ப்பதன் மூலம் 2 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சி திமுக என்ற பெயரை பெறும்.












Click it and Unblock the Notifications