விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா
சென்னை: திமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அது என்னென்ன என்பதை நாளை அல்லது நாளை மறுநாள் சொல்வோம் என பிரேமலதா கூறினார். குறிப்பாக விஜயகாந்த் முதன் முதலில் போட்டியிட்ட தொகுதி, விஜய பிரபாகரன் போட்டியிட்ட தொகுதி உள்பட 25 தொகுதிகளை உத்தேச பட்டியலாக திமுகவிடம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துவிட்டு, வேட்பாளர்களை அறிவிக்க தீவிரம் காட்டி வருகிறது.

எல்லா புகழும் கேப்டனுக்கே..
அந்த வகையில் இன்று தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 10 ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக கூடுதல் தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, தேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் அளித்துள்ளதாக கூறினார். அவர் கூறியதாவது:-
இரு நாட்களில் தொகுதி விவரம் உறுதியாகும். எல்லா புகழும் கேப்டனுக்கே.. விரைவில் களப்பணியை தொடங்குவோம். வரும் 27 ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். 1 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யப்படும். விருப்ப பட்டியலில் விருத்தாசலம் உள்ளது.
திமுக கூட்டணி வெற்றி பெறும்
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை உத்தேச பட்டியலில் கொடுத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிராபகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியும் உத்தேச பட்டியலில் உள்ளது. மொத்தம் 25 தொகுதிகளை உத்தேச பட்டியலாக திமுவிடன் கொடுத்து இருக்கிறோம். நாளை, நாளை மறுநாள் எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். தேமுதிகவிற்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா வழங்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் தெரிவிக்க உள்ளது இந்த கூட்டணி.
விருத்தாசலம், விருதுநகர் தொகுதியை கேட்டுள்ளோம்
விரைவில் களத்தில் மக்களை சந்திக்க உள்ளோம். கூட்டணியில் போட்டியிடும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுக்கும் வெற்றிக்காக தேமுதிக உழைக்கும். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள உத்தேச பட்டியலை வழங்கியுள்ளோம். எங்களுக்கான தொகுதிகளை இரண்டு நாட்களில் இறுதி செய்வோம்.
கடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி வேறு.. இந்த கூட்டணி வேறு. இந்தக் கூட்டணி எங்கள் கட்சியினர் விரும்பிய கூட்டணி. எனவே, இந்த தொகுதிகளை கட்சியினர் ஏற்றுக்கொள்வார்கள். விருதாச்சலம், ரிஷிவந்தியம், விருகம்பாக்கம், விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகள் உத்தேச பட்டியலில் உள்ளது. எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அதையெல்லாம் உத்தேச பட்டியலில் கொடுத்துள்ளோம். 25 தொகுதிகளை கொடுத்துள்ளோம்.
விருகம்பாக்கம், ஆம்பூர், குடியாத்தம்
அதில் 10 தொகுதிகளை பெறுவோம். குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளுடன் உத்தேச பட்டியலில் உள்ளன. எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களும் உள்ளன. விருகம்பாக்கம் தொகுதியும் உள்ளது. திமுக கூட்டணியில் நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்து இருக்கிறோம். திமுக கூட்டணியில் இதை விட அதிக தொகுதிகளை கேட்டு இருக்கிறோம். மற்றவர்கள் எல்லாம் விட்டு கொடுக்கிறார்கள்.
நீங்களும் விட்டு கொடுக்கிறார்களா என்று கேட்கிறீர்கள். நாங்களும் விட்டு கொடுத்து இருக்கிறோம். நாங்கள் விட்டு கொடுத்த பிறகுதான் 10 தொகுதிகள் உறுதி கொடுத்துள்ளது. நாங்களும் கூட்டணிக்காக எங்கள் தொகுதிகளை விட்டு கொடுத்து இருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications